Seeman : `பெரியாரை விமர்சித்த பெரிய கூலி கருணாநிதிதான்' - ஈரோட்டில் சீமான் காட்டம்
ஈரோட்டில் பெருமாள் மலைப் பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பெரியாரை இழிவுபடுத்தும் கூலிகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளது என கனிமொழி பேசியுள்ளார். திமுக-வின் நிறுவனரான அண்ணாவையும், அவரது தந்தை கருணாநிதியையும் குறிப்பிட்டுத்தான் அவ்வாறு கூறியுள்ளார். நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசினாரோ அதைத்தான் எடுத்துப் பேசுகிறேன். பெரியாரைப் பற்றி பேசுகிறார் கனிமொழி. ஆனால், பெரியார் என்ன பேசினார்... என்ன எழுதினார் என பேச அவருக்கு துணிவு இருக்கிறதா? பெரியாரை பேரறிஞர் அண்ணா, கருணாநிதி அளவுக்கு விமர்சித்தவர்கள் உண்டா? அப்படிப் பார்த்தால் பெரியாரை விமர்சித்த பெரிய கூலி கருணாநிதிதான்.
எந்த இடத்தில் கனிமொழியும், அவரது குடும்பமும் பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுகிறது என்று சொல்ல முடியுமா? அவரது மருமகனும், துணை முதல்வருமான உதயநிதியின் நெற்றியில் திருநீரு பூசுகிறீர்கள். அதுதான் உங்கள் கடவுள் மறுப்பா? திமுக பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமை என்ன? பெரியார் சாதி ஒழிப்பை எங்கு நிலை நிறுத்தியுள்ளார்? இத்தனை தொகுதிகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது, தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட்டதற்கு சாதிதானே காரணம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களிடம் திமுக கொடியைக் கட்டிக் கொண்டு சாலையின் குறுக்கே போட்டு தொந்தரவு செய்கிறார்கள். கேட்டால், வண்டி இடித்துவிட்டது. அதனால், துரத்திப் போனதாக கதை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என்றார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன நீதியைப் பெற்றுத் தந்தீர்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தலைமுறைகளை உருவாக்கியதை தவிர திராவிடக் கட்சியும், பெரியாரும் எந்த சாதனையையும் செய்யவில்லை.
ஸ்டாலின் குடும்பத்தில் கடவுள் மறுப்பு கடைப்பிடிக்கப்படுகிறதா? முதல்வரின் மனைவி துர்கா வீட்டில் உள்ள பூஜை அறையில் சமஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்கிறார். அத்திவரதர் கோயிலில் குடும்பமாக நின்று கும்பீட்டீர்கள். அதுதான் உங்கள் கடவுள் மறுப்பா? ஆ.ராசாவை ஏன் நீலகிரியில் நிறுத்திகிறீர்கள். பொதுத் தொகுதியில் அவரை நிறுத்த மறுக்கிறீர்கள்? இதுதான் உங்கள் சமூகநீதியா?. அதேவேளை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தனபாலை சட்டப் பேரவைத் தலைவராக்கியது நீங்கள் சொல்லி பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். வாக்குக்குப் பணம் கொடுத்த கனிமொழி பேசலாமா? ஓட்டை பணம் கொடுத்து வாங்க மாட்டேன். அப்படிப்பட்ட வெற்றி எனக்குத் தேவையில்லை என்று சொன்னார் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன். அதுமாதிரி ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட தயாரா?" என்றார்.