தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!
`Right to Die With Dignity' - முதல் மாநிலமாக உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் கர்நாடகா!
குணப்படுத்த முடியாத, உயிர் காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை" அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இவ்வாறு குணப்படுத்த முடியாமல் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையை நிறுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடகா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம், 1994-ன் கீழ் உரிய அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அல்லது தீவிர சிகிச்சை நிபுணர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டதாகக் கருதப்படுவார்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாவட்ட சுகாதார அதிகாரி (DHO) மருத்துவ நிபுணர்களின் இரண்டாம் நிலை குழுவின் உறுப்பினராக அத்தகைய இறப்புகளுக்குச் சான்றளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நோயாளிகள் அனுமதிக்கப்படும் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு நடத்தும் மருத்துவ நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதே போன்ற உத்தரவுகளை கேரளா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பிறப்பிக்கவுள்ளதாக மும்பையின் பிடி ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் நிபுணரான டாக்டர் ரூப் குர்சஹானி என்பவர் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இது குறித்து கூறுகையில், ``இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் குடும்பங்களுக்குப் பயனளிக்கும்” என்றார். மேலும், ``இதை கருணைக் கொலையுடன் இணைத்து தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. சிகிச்சையால் எவ்வித பயனும் இல்லாமல், குணப்படுத்த முடியாதவர்களுக்கும் மட்டுமே இது பொருந்தும்" என்றும் அவர் கூறியிருப்பதாக அச்செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.