நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு
Rocky: நிலச்சரிவிலிருந்து 67 பேர் உயிரைக் காத்த நாய்குட்டி - இமாச்சலில் மனதை உருக்கும் சம்பவம்!
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை தொடங்கியது முதல் பல்வேறு மேகவெடிப்பு நிகழ்வுகளால் மழைக் கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்பகுதியாக கடந்த ஜூன் 26ம் தேதி மண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
சியாதி கிராமத்தில் நள்ளிரவு 12:30 - 1:00 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து கிராம மக்கள் 67 பேரை காப்பாற்ற உதவியுள்ளது ராக்கி என்ற வளர்ப்பு நாய்.
அன்று தரைத்தளத்தில் படுத்திருந்த நாய், வழக்கத்துக்கு மாறாக ஊழையிட்டு குரைத்திருக்கிறது.
இதைக் கேட்ட உரிமையாளர் லலித் குமார், கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் சுவற்றில் மிகப் பெரிய விரிசல் இருந்ததைக் கவனித்திருக்கிறார். விரிசலில் இருந்து தண்ணீர் உள்ளே வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், நாயை தூக்கிக்கொண்டு இரண்டாவது மாடிக்கு விரைந்துள்ளார்.
அங்கே குடும்பத்தினரை எழுப்பி வெளியேறுமாரு கூறியுள்ளார். ஊரிலேயே உயரமான அவரது வீட்டில் இருந்து தூரத்தில் நிலச்சரிவு ஏற்படுவது தெரிந்திருக்கிறது. கிராமத்தை நோக்கி தண்ணீர் காட்டாறாக அடித்துவருவதைப் பார்த்த அவர், உடனடியாக வரவிருக்கும் அபாயத்தைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு கதவாக தட்டி அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அனைவருமே தங்கள் உடைமைகளையும் வீட்டையும் விட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விரைந்துள்ளனர்.
மொத்தமாக 22 குடும்பத்தினர் தப்பித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 4,5 கட்டடங்கள் தான் கண்ணில் தென்படுவதுபோல இருந்துள்ளன. 6,7 வீடுகள் முற்றிலுமாக புதைந்துள்ளன. பல வீடுகள் அடையாளம் தெரியாமல் போகுமளவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
63 பேர் உயிரைக் காப்பாற்றத் தொடக்கமாக இருந்த ராக்கி நிலச்சரிவில் சிக்கியிருக்கிறது. பின்னர் அதனை மீட்டுள்ளனர். 5 வயது நாய்குட்டி ராக்கியை மூன்று மாதங்களுக்கு முன் தனது சகோதரரிடம் இருந்து வாங்கி வந்ததாக லலித் குமார் இந்தியா டுடே தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கிராம மக்கள் ராக்கி மற்றும் லலித் குமார் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள திரியம்பலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 10,000 ரூபாய் வழங்கியுள்ளது அரசாங்கம்.