செய்திகள் :

RR vs CSK : கடைசி வரை போராடிய CSK; RR வென்றது எப்படி?

post image

'திரில் போட்டி!'

அசாமின் கவுஹாத்தியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை அணி கடைசி ஓவர் வரை திரில்லாக போட்டியை எடுத்துச் சென்று தோற்றிருக்கிறது. சுவாரஸ்யமாக சென்ற இந்தப் போட்டியில் என்ன நடந்தது?

CSK
CSK

'ராஜஸ்தான் பேட்டிங்!'

சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்தான் டாஸை வென்றிருந்தார். நல்ல பிட்ச்சாக இருக்கிறது. அதனால் சேஸ் செய்யவே விரும்புகிறேன் என்றார். ருத்துராஜின் இந்த டாஸ் முடிவில் கொஞ்சம் மாற்றுக் கருத்துகள் இருக்கவே செய்கிறது. ஏனெனில், இந்த பிட்ச் ஆரம்பத்தில் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்குமளவுக்கு ஆட்டம் செல்ல செல்ல இருக்கவில்லை. பவர்ப்ளேயை தாண்டிய உடனே பௌலர்களுக்கு சாதகமான பிட்ச்சாகவே இருந்தது. பேட்டர்கள் திணறவே செய்தனர்.

'நிதிஷ் ராணா அதிரடி!'

ராஜஸ்தான் இன்னிங்ஸிலும் அதுதான் நடந்திருந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தானின் இன்னிங்ஸை மூன்றாகப் பிரிக்கலாம். பவர்ப்ளேயில் அந்த அணி 79 ரன்களை எடுத்திருந்தது ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் காலியாகியிருந்தார். நம்பர் 3 இல் நிதிஷ் ராணா வந்திருந்தார். பவர்ப்ளே முழுவதையும் தனதாக்கிக் கொண்டார்.

Nithish Rana
Nithish Rana

கலீல் அஹமது, ஜேமி ஓவர்டன், அஷ்வின் என பவர்ப்ளேயில் வீசிய அத்தனை பௌலர்களையும் சிதறடித்தார். கலீலும் ஜேமி ஓவர்டனும் ஷார்ட் பாலாக வீச அதை மடக்கி மடக்கி ஸ்கொயரிலும் பைன் லெக்கிலும் பவுண்டரிக்களாகவும் சிக்சராகவும் மாற்றினார். வேகப்பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என அஷ்வினை அழைத்து வந்தார் ருத்துராஜ். அஷ்வின் முதல் ஓவரில் மட்டும் 19 ரன்கள். அவரையும் விட்டு வைக்கவில்லை. சிரமமே இல்லாமல் முட்டி போட்டு மடக்கி ஆடி பவுண்டரிக்களை அடித்துக்கொண்டே இருந்தார்.

21 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். நடப்பு சீசனில் பவர்ப்ளேக்குள்ளாக அரைசதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையையும் பெற்றார். நிதிஷின் அதிரடியால் பவர்ப்ளேயில் 79 ரன்கள். ஆனால், பவர்ப்ளே முடிந்த பிறகு போட்டி மாற தொடங்கியது. 7-15 மிடில் ஓவர்களில் 65 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் எடுத்தது. 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. பவர்ப்ளேயில் நிதிஷூக்கே ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டிருந்த சாம்சன், பவர்ப்ளே முடிந்தவுடன் நூர் அஹமதுவின் பந்தில் அடிக்க முயன்று அவுட் ஆனார்.

Nithish Rana
Nithish Rana

நிதிஷ் ராணாவின் வேகம் கொஞ்சம் குறைந்திருந்தாலும் அடித்துக்கொண்டுதான் இருந்தார். சதத்தை நோக்கி முன்னேறுவார் என எதிர்பார்க்கையில் அஷ்வின் ஓவரில் பவுண்டரி சிக்சர் அடித்தவுடன் அமைதியாகாமல், இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று ஸ்டம்பிங் ஆனார். 81 ரன்களில் நிதிஷ் ராணா அவுட். ரியான் பராக் கொஞ்சம் நின்று அவ்வபோது பெரிய ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். ஆனாலும், பிற்பாதியில் போட்டி சென்னை பௌலர்களின் கைக்கு வந்தது.

CSK
CSK

ஜடேஜா விக்கெட் எடுத்தார். பதிரனா விக்கெட் எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 37 ரன்களை மட்டுமே கொடுத்தது. ஹெட்மயர், ரியான் பராஜ், துருவ் ஜூரெல் என அதிரடியாக ஆட வாய்ப்பிருந்த பேட்டர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்திருந்தது.

'சென்னையின் சேஸ்!'

சென்னைக்கு டார்கெட் 183. கொஞ்சம் கடினமான டார்கெட்தான். மேலும், கடந்த 6 சீசன்களில் சென்னை அணி 180+ டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை என்கிற ரெக்கார்டும் சென்னைக்கு எதிராகத்தான் இருந்தது. அதற்கேற்ற வகையில்தான் சென்னை அணியின் பவர்ப்ளேயும் இருந்தது. வெறும் 42 ரன்களை மட்டும்தான் சேர்த்திருந்தனர். முதல் ஓவரிலேயே பார்மிலிருந்த ரச்சின் ஆர்ச்சர் வீசிய ஒரு குட் லெந்த் டெலிவரியில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். ரச்சின் டக் அவுட் ஆன நிலையில் ருத்துராஜ் வந்தார். அடுத்த 3 ஓவர்களையுன் திரிபாதியும் ருத்துவும் பார்த்தே ஆடினர். ரன்னே வரவில்லை. ஆர்ச்சரும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களாக வீசி திணறடித்தார். பவர்ப்ளேயின் கடைசி 2 ஓவர்களில்தான் ரன்கள் அடிக்க ஆரம்பித்தனர்.

Ruturaj
Ruturaj

ஆர்ச்சரை திரிபாதி பவுண்டரியும் சிக்சரும் அடிக்க, ருத்துராஜ் சந்தீப் சர்மாவின் ஓவரில் மூன்று பவுண்டரிக்களை அடித்தார். ஓரளவுக்கு டீசண்ட்டாக இந்த பார்ட்னர்ஷிப் முன்னேறியது. ஆனால், மிடில் ஓவர்களில் ஹசரங்கா, தீக்சனா, குமார் கார்த்திகேயா என மூன்று ஸ்பின்னர்களை வைத்து ராஜஸ்தான் சவாலளித்தது. ராகுல் திரிபாதி 23 ரன்களில் ஹசரங்காவின் பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு ருத்துராஜூடன் இணைந்த துபே, விஜய் சங்கர் ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிக்சர் அடித்துவிட்டு விக்கெட்டை கொடுத்து வெளியேறினர்.

ஹசரங்கா விக்கெட் வேட்டை நடத்தினார். சிக்சர் அடித்த அடுத்த பந்திலேயே ஒரு கூக்ளியில் விஜய் சங்கரை வீழ்த்தினார். அரைசதத்தை கடந்திருந்த ருத்துராஜையும் சிக்சர் அடித்த அடுத்த பந்திலேயே அவுட் ஆக்கினார். கடைசி 4 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. தோனியும் ஜடேஜாவும் க்ரீஸில் நின்றனர். சந்தீப் சர்மா வீசிய 17 வது ஓவரில் 9 ரன்கள். ஜடேஜா மட்டும் ஒரு பவுண்டரி அடித்தார். தீக்சனா வீசிய 18 வது ஓவரில் பவுண்டரியே இல்லை. வெறும் 6 ரன்கள் மட்டுமே.

Dhoni
Dhoni

'டெத் ஓவர் திரில்!'

இப்போது கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19 ஓவரில் 19 ரன்கள். தோனி ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் தனது ஸ்டைலில் அடிக்க, ஜடேஜா ஒயிடாக சென்ற ஒரு பந்தை அற்புதமாக மடக்கி அடித்து சிக்சராக்கினார். சந்தீப் சர்மா வீச கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்திலேயே ஒயிடு. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் தோனி பெரிய ஷாட்டுக்கு முயல பவுண்டரில் லைனில் ஹெட்மயர் பாய்ந்து விழுந்து அற்புதமாக கேட்ச் பிடித்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைய ஜேமி ஓவர்டன் உள்ளே வந்தார். இரண்டாவது பந்தில் சிங்கிள். மூன்றாவது பந்தில் ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருந்தார். அந்த பந்திலும் சிங்கிள். கடைசி 3 பந்துகளில் 17 ரன்கள் தேவை. மூன்று பந்துகளில் மூன்று சிக்சர்கள் தேவை எனும் நிலையில், ஃபுல்லாக வந்த நான்காவது பந்தை ஓவர்டன் சிக்சராக்கினார். பரபரப்பு கூடியது. ஆனால், ஓவர்டன்னால் அடுத்த 2 பந்துகளையும் சிக்சராக மாற்ற முடியவில்லை. சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Jadeja
Jadeja

சென்னை அணி தோற்றிருக்கிறது. ஆனால், பெங்களூருவுக்கு எதிராக போராடாமல் வீழ்ந்ததை போல இங்கே நடக்கவில்லை. சென்னை அணி போராடியிருக்கிறது. அதுவே கொஞ்சம் பாசிட்டிவ்வான விஷயம்தான்.

இன்றைய ஆட்டத்தை மாற்றிய தருணம் என நீங்கள் நினைப்பது எது என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்.

CSK vs DC: "தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள்" - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி,... மேலும் பார்க்க

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க

MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் ... மேலும் பார்க்க

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎ... மேலும் பார்க்க

Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்

மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச்... மேலும் பார்க்க

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்... மேலும் பார்க்க