ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!
உலகளவில் ஜிப்லி பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், ஒருமணி நேரத்தில் 10 லட்சம் புதிய பயனர்களை சாட்ஜிபிடி எட்டியுள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமான சாட்ஜிபிடி என்னும் செய்யறிவு தொழில்நுட்பத்தின் புதிய அம்சமாக ஜிப்லி என்னும் புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் சேவை இணைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பல்வேறுதரப்பட்ட மக்கள் சாட்ஜிபிடியின் ஜிப்லியைப் பயன்படுத்துவதால், சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமானது சாட்ஜிபிடி. செய்யறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் சாட்ஜிபிடியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் பயனர்கள் வழங்கும் புகைப்படங்களில் உள்ள உருவங்கள் மற்றும் பின்னணிகளை ஓவியமாக மாற்றி, ஜிப்லி வழங்குகிறது. இது பெரும்பாலும் அனிமி எனப்படும் ஜப்பான் கார்ட்டூன் கதாபாத்திர வடிவை பிரதிபலிக்கிறது.
சாட்ஜிபிடியை கட்டணமின்றி பயன்படுத்திவரும் பயனர்களுக்கும் ஜிப்லி அம்சத்தை பயன்படுத்தும் வசதியை ஓபன்ஏஐ வழங்கியுள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்கள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லியில் ஓவியமாக மாற்றி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சாட்ஜிபிடியில் மார்ச் 29ஆம் தேதி தொடங்கி எப்ரல் 1ஆம் தேதி ஜிப்லி பயன்பாடு முழுமையடைந்தது.
இது குறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
26 மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மக்களால் வெறித்தனமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வைரல் நிகழ்வைக் காண்கிறேன். கடந்த 5 நாள்களில் 10 லட்சம் பயனர்களை எட்டியுள்ளோம். ஆனால், இன்று கடந்த ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்களை அடைந்துள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.
the chatgpt launch 26 months ago was one of the craziest viral moments i'd ever seen, and we added one million users in five days.
— Sam Altman (@sama) March 31, 2025
we added one million users in the last hour.
சாட்ஜிபிடிக்கு சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே ஜிப்லி அம்சம் முதலில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இலவசமாக சாட்ஜிபிடியைப் பயன்படுத்துபவர்களும் ஜிப்லி அம்சத்தை பயன்படுத்தும் வகையில் மாற்றங்களைச் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். தற்போது சாட்ஜிபிடியை 70 கோடி பயனர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.