Saif Ali Khan: `முக்கிய பிரமுகர்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில்..?’ - உத்தவ் சிவசேனா காட்டம்
சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து
மும்பையில் இன்று அதிகாலை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். அவருக்கு பாந்த்ரா லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை கண்டுபிடிக்க போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்திருக்கின்றனர். 3 தனிப்படைகள்ன் மும்பை முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதோடு சைஃப் அலிகான் வீட்டில் வேலை செய்து வரும் 3 பேரை விசாரணைக்காக பிடித்துச்சென்றுள்ளனர். அதில் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டபோது காயம் அடைந்த ஒருவரும் அடங்கும். சைஃப் அலிகான் வீட்டில் புகுந்து திருடன் கத்தியால் குத்தி இருப்பது குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கேள்வி எழுப்பி இருக்கிறது.
இது குறித்து அக்கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''மும்பையில் முக்கிய பிரமுகர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் வேறு யாருக்கு பாதுகாப்பு இருக்கப்போகிறது?. மும்பையில் மற்றொரு முக்கிய பிரமுகரை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது எவ்வளவு அவமானகரமானது. சைஃப் அலி கான் மீதான தாக்குதல் மீண்டும் மும்பை காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் செயல்பாடுகள் மீது சந்தேகம் கொள்ள செய்துள்ளது. மும்பையின் மதிப்பை குறைக்க வேண்டுமென்று திட்டமிட்டு பெரிய பிரமுகர்கள் தாக்கப்படுவது போன்று இது இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா சதுர்வேதி சமீபத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது, நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
பாபா சித்திக் குடும்பம் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறது. சல்மான் கான் புல்லட் புரூப் வீட்டில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது சைஃப் அலிகான் தாக்கப்பட்டுள்ளார். முக்கிய பிரமுகர்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட பகுதியில் முக்கிய பிரமுகரே தாக்கப்பட்டுள்ளார் என்றால் மும்பையில் யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.