SarojaDevi: ``தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும்.." - சரோஜா தேவி மறைவு குறித்து நடிகை குஷ்பு
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனது இல்லத்தில் காலமானார்.
காவல் அதிகாரியான சரோஜா தேவியின் தந்தை சரோஜா தேவி நடிப்பின் பக்கம் வருவதற்கு மிக முக்கியமான காரணம். 'மகாகவி காளிதாசா' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர், சிவாஜி கணேசனின் 'தங்கமலை ரகசியம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் தடம் பதித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலருடனும் சரோஜா தேவி இணைந்து பணியாற்றியிருக்கிறார். இவரின் மறைவு இவரின் ரசிகர்கள், சினிமா துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவரின் மறைவு குறித்து நடிகை குஷ்பு சுந்தர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒரு சினிமா சகாப்தம் முடிவுக்கு வருகிறது. சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் அவரைப் போல பெயரையும் புகழையும் அனுபவித்ததில்லை. அவர் மிகவும் அன்பானவர். அவருடன் ஒரு சிறந்த உறவு இருந்தது. அவரைச் சந்திக்காமல் பெங்களூருக்கான எனது பயணம் முழுமையடையாது. சென்னையில் இருக்கும் போதெல்லாம், அவர் அழைப்பார். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.