Seeman : 'பிரஷாந்த் கிஷோருக்கு திருப்பரங்குன்றம் பிரச்னையை பற்றி தெரியுமா? - சீமான் காட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது,'திருப்பரங்குன்றம் பிரச்னையும் அத்திக்கடவு அவினாசி திட்டமும் பிரஷாந்த் கிஷோருக்கு தெரியுமா?' என காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

`நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு’
சீமான், 'விஜய்க்கு மட்டும் Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லையே. இங்கே நிறைய பேருக்கு அப்படியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவையென்றால் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள். நான் மக்களோடு மக்களுக்காக நிற்பவன். எனக்கு பாதுகாப்பு வேண்டுமா என்றால், நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக்கு எதுக்கு பாதுகாப்பு என கேட்பேன். கள்ளச்சாராயத்தை தடுக்க முயன்று இருவர் கொலையுண்ட விஷயம் கொடுமையானது. அதைவிட, அந்த கொலையை முன்விரோதம் காரணமாக நடந்ததென காவல்துறை கூறுவது இன்னும் கொடுமையானது. வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் போன்ற அதிகாரிகளை மாற்றுவார்களே தவிர இந்த அரசு எதற்கும் பொறுப்பேற்காது.
அது ஒரு வியாபாரம்
தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேர்தலுக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள். அது ஒரு வியாபாரம். மக்களுக்காக எங்கே யோசிக்கிறார்கள்? மக்களுக்கான அரசியல்தான் இங்கே தேவை. விஜய்யையே எடுத்துக்கொள்ளுங்களேன். ஜான் ஆரோக்கியசாமியும் ஆதவ் அர்ஜூனாவும் இந்த மண்ணில் பிறந்து வந்தவர்கள். அவர்களை தாண்டி பீகாரிலிருந்து பிரஷாந்த் கிஷோரும் ஆந்திராவிலிருந்து சுனிலும் எதற்கு? திருப்பரங்குன்றம் பிரச்சனையும் அத்திக்கடவு அவினாசி திட்டமும் பிரஷாந்த் கிஷோருக்கு தெரியுமா? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கெல்லாம் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லேயே?

பீகாரில் ஒரு தொகுதியில் கூட பிரஷாந்த் கிஷோரால் வெல்ல முடியவில்லையே? ஜான் ஆரோக்கியசாமியும் ஆதவ் அர்ஜூனாவுமே கெட்டிக்காரர்கள். அவர்கள் போதாதா உங்களுக்கு? கடந்த காலத்தில் ஜான் ஆரோக்கியசாமியுடன் எந்த ஒப்பந்தத்தையும் போடவில்லை. எனக்கும் அவருக்கும் இருப்பது கட்சி அரசியலை தாண்டிய உறவு. அவர் மட்டுமல்ல பல பேர் எனக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். திராவிட மாடல் அரசின் தலைவர் ஸ்டாலின். ஆன்மீக மாடல் அரசின் தலைவர் சேகர் பாபு.' என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play