அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
Sodium: தொற்றா நோய்கள் வராமல் தடுக்க வேண்டுமா? WHO வழிகாட்டல் இதுதான்!
பரிந்துரைக்கப்பட்ட அளவை மீறாமல் சோடியம் சாப்பிட்டால், அடுத்த 10 வருடங்களில் 3 லட்சம் இறப்புகளைத் தவிர்க்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதென்ன பரிந்துரைக்கப்பட்ட அளவு, அதை யார் பரிந்துரைத்தது, அந்த ஆய்வு சொல்வதென்ன...
உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த அளவின்படி இந்தியர்கள் சோடியத்தை எடுத்துக்கொண்டால், அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் ஏற்படவிருக்கிற மூன்று லட்சம் இறப்புகளைத் தவிர்க்கலாம் என்கிறது 'தி லான்செட் பப்ளிக் ஹெல்த் ஜர்னலில்' வெளியிடப்பட்டுள்ள ஆய்வு ஒன்று.
இன்றைய இளைஞர்கள் இதயம் சார்ந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அவர்களின் உணவு முறையும் ஓர் இன்றியமையாத காரணமாக இருக்கிறது. குறிப்பாக உணவில் உப்பின் அளவினை அதிகரிப்பதால் உடலுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக இதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் வெகுவாக குறைகின்றன. WHO பரிந்துரைப்படி ஒரு நாளைக்கு 2 கிராம் சோடியத்திற்கும் குறைவாக உட்கொள்ள வேண்டும். 2 கிராம் சோடியம் என்பது கிட்டத்தட்ட 5 கிராம் உப்பில் இருக்கும். இந்த 5 கிராம் உப்பு ஒரு டீஸ்பூன் அளவு இருக்கும். உப்பை அதிகம் உணவில் சேர்த்தால், சோடியமும் நம் உடலில் அதிகளவு சேரும். விளைவு, பக்கவாதம் போன்ற உடல் இயலாமை முதல் இறப்பு வரை ஏற்படலாம்.
சோடியம் நம் உடலில் சேர்வதற்கு முக்கியமான காரணம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள்தான். அதிக வருவாய் ஈட்டும் நாடுகளிலிருந்த வந்த இந்த உணவுப்பழக்கம், தற்போது நடுத்தர மற்றும் குறைவான வருவாய் ஈட்டும் நாடுகளிலும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. 2025-ம் ஆண்டு 30 சதவிகிதம் வரைக்கும் சோடியம் எடுத்துக்கொள்வதைக் குறைத்தால், தொற்றாத நோய்களை வராமல் தடுக்க முடியும், வந்துவிட்டால் கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
சோடியத்தை குறைப்போம். தொற்றா நோய்களைத் தவிர்ப்போம்.