நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
SRH vs GT: `மொதல்ல 200 அடிங்க பாஸ்' - குஜராத்திடம் சைலன்ட் ஆன கம்மின்ஸ் & கோ
ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 6) நேருக்குநேர் களமிறங்கின. கடைசி மூன்று போட்டிகளாகப் பெற்றுவரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹைதராபாத்தும், ஹாட்ரிக் வெற்றிபெரும் முனைப்பில் குஜராத்தும் களமிறங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கைத் தேர்வுசெய்தார்.

பவர்பிளேயில் ஹைதராபாத்துக்கு தலைவலி கொடுத்த சிராஜ்!
முதல் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த டிராவில் ஹெட்டை, அந்த ஓவரின் கடைசி பந்திலேயே 8 ரன்களில் அவுட்டாக்கினார் சிராஜ். ஆனால், முதல் ஓவரிலேயே தனது அணி ஒரு விக்கெட் இழந்ததைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அபிஷேக் சர்மா, இஷாந்த் சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் பேக் டு பேக் பவுண்டரியும், சிராஜ் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்து அசத்தினார்.

மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் தன் பங்குக்கு, இஷாந்த் சர்மா வீசிய 4-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். அந்த சமயத்தில்தான், குறுக்க இந்த கவுசிக் வந்தா... என்பது போல 5-வது ஓவரில் அபிஷேக் சர்மாவை 18 ரன்களில் காலி செய்தார் சிராஜ். அடுத்து, ரஷித் கான் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவர் பவுண்டரி இன்றி முடிய, 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் குவித்தது ஹைதராபாத்.
க்ளாஸெனை க்ளீன் செய்த சாய் கிஷோர்
அந்த சமயத்தில்தான் அதிரடி வீரர் ஹென்றிச் க்ளாஸென் கிரீஸுக்குள் வந்தார். ஆனால், ஹைதராபாத்துக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் 7-வது ஓவரின் இரண்டாவது பந்தில் இஷான் கிஷனை 17 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் பிரசித் கிருஷ்ணா. அங்கு தேங்கிய ஹைதராபாத் அணி, 8, 9,10 ஆகிய ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ஒருவழியாக, ரஷீத் கான் வீசிய 11-வது ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டியின் இரண்டு பவுண்டரி மூலம் 6 ஓவர்களுக்குப் பிறகு ஹைதராபாத்துக்கு பவுண்டரி வந்தது.

12-வது ஓவரில் மீண்டும் ஹைதராபாத் பழைய நிலைக்குச் சென்று நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், ரஷீத் வீசிய 13-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து தனியாளாக 11 ரன்கள் சேர்த்தார் க்ளாஸென். இருப்பினும், அவரின் அதிரடி அடுத்த ஓவர் வரை கூட நீடிக்கவில்லை. 14-வது ஓவரின் ஐந்தாவது பந்திலேயே க்ளாஸெனை க்ளீன் போல்டாக்கினார் சாய் கிஷோர். 15-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வர, மீண்டும் பந்துவீச வந்த சாய் கிஷோர், ரன்கள் அடிக்கத் தடுமாறிக் கொண்டிருந்த நிதிஷ் குமார் ரெட்டியை 16-வது ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாக்கினார்.
ரன்களை வாரி இரைத்த இஷாந்த்... அதிரடி காட்டிய கம்மின்ஸ்!
அந்த ஓவர் மூன்று ரன்களோடு முடிய, 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்தது. இனிமேலாவது ரன்கள் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் ரசிகர்களுக்கு, பிரசித் கிருஷ்ணா வீசிய 17-வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார் அனிகேட் வர்மா. ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் கமிந்து மெண்டிஸ் அவுட்டானார். 6 விக்கெட்டுகள் போன நெருக்கடியான நேரத்தில் களத்துக்குள் வந்த கேப்டன் கம்மின்ஸ், இஷாந்த் சர்மா வீசிய 18-வது ஓவரில் அசத்தலாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

ஆனால், மீண்டும் குறுக்கே வந்த சிராஜ், 19-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், இஷாந்த் சர்மா அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 17 ரன்கள் கொடுத்து, ஹைதரபாத் அணி 150 ரன்கள் கடக்க உதவினார். கடைசி நேரத்தில் கம்மின்ஸ் அதிரடி கேமியோ காட்டி 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது ஹைதராபாத். குஜராத் தரப்பில், சிராஜ் 4 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 4 ஓவர்களில் விக்கெட் எதுவுமின்றி 53 ரன்களை வாரி வழங்கினார்.
குஜராத்துக்கு ஷாக் கொடுத்த ஷமி - கம்மின்ஸ் காம்போ!
பின்னர், 153 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி சாய் சுதர்ஷனும், கேப்டன் சுப்மன் கில்லும் களமிறங்கினர். முதல் ஓவரை டைட்டாக வீசிய முகமது ஷமி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கம்மின்ஸ் வீசிய இரண்டாவது ஓவரும் பவுண்டரி எதுவுமின்றி 4 ரன்கள் மட்டுமே வந்ததது. பின்னர் ஒருவழியாக, ஷமி வீசிய மூன்றாவது ஓவரில் அணியின் முதல் பவுண்டரியை அடித்தார் சுப்மன் கில்.

ஆனால், அதே ஒவரில் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் சாய் சுதர்சன். அவரைத்தொடர்ந்து, ஒன்டவுனில் களமிறங்கிய ஜாஸ் பட்லரும், கம்மின்ஸ் வீசிய 4-வது ஓவரில் டக் அவுட்டானார். 4 ஓவர்கள் முடிவில் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை இழந்து 17 ரன்கள் எடுத்தது குஜராத். அந்த சமயத்தில் யாரும் எதிர்பாரா வகையில், சுப்மன் கில்லுடன் கைகோத்தார் வாஷிங்டன் சுந்தர்.
குஜராத்தை மீட்ட கில் - வாஷி ஜோடி!
ஷமி வீசிய 5-வது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளை சுப்மன் கில் பவுண்டரிக்கு அனுப்ப, ஆறாவது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார் வாஷிங்டன் சுந்தர். பவர்பிளே முடிவில் 48 ரன்கள் குவித்தது குஜராத். அடுத்து, 7, 8, 9 ஆகிய ஓவர்களில் மொத்தமாக 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்து 50 பார்ட்னர்ஷிப்பைக் கடந்தது கில் - வாஷி ஜோடி. 10-வது ஓவரில் பவுண்டரி எதுவுமின்றி 6 ரன்கள் வர, 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் குவித்தது குஜராத்.

நீண்ட நேரமாக விக்கெட்டே வரவில்லை என்பதால், பந்துவீச தாமாக முன்வந்தார் கேப்டன் கம்மின்ஸ். ஆனால், 11-வது ஒரு பவுண்டரி வந்தது மட்டும்தான் மிச்சம். 12-வது ஓவரில் 8 ரன்கள் வர, 13-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் கில். தொடர்ந்து, 11, 12, 13 ஆகிய ஓவர்களில் தலா 8 ரன்கள் குவித்தது குஜராத்.
முடித்து வைத்த ரூதர்ஃபோர்ட்!
அந்த சமயத்தில் 14-வது ஓவரை வீசவந்த ஷமி, முதல் பந்திலேயே வாஷிங்டன் சுந்தரை 49 ரன்களில் அவுட்டாக்கினார். கிட்டத்தட்ட 10 ஓவர்களுக்குப் பிறகு ஒரு விக்கெட்டை இழந்த குஜராத், 14 ஓவர்கள் முடிவில் 112 ரன்கள் குவித்தது. அடுத்து, இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கிய ரூதர்ஃபோர்ட், அபிஷேக் சர்மா வீசிய 15-வது ஓவரில் முதல் நான்கு பந்துகளை பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் வந்தது.

அடுத்து, ஸீஷன் அன்சாரி வீசிய அடுத்த ஓவரில் கில் பேக் டு பேக் பவுண்டரி அடிக்க, 16 ஓவர்கள் முடிவில் 141 ரன்களைக் குவித்தது குஜராத். 24 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே குஜராத்தின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் முதல் இரு பந்துகளையும் சிக்ஸ், பவுண்டரி ஆக்கி மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்து, வின்னிங் ஷாட்டை கில்லிடம் ஒப்படைத்தார் ரூதர்ஃபோர்ட். அடுத்த பந்தில் கில் ஈசியாக சிங்கிள் எடுக்க, இந்த சீசனில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது குஜராத். கில் 43 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 61 ரன்களுடனும், ரூதர்ஃபோர்ட் 16 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 35 ரன்களுடனும் களத்தில் நின்றனர். குஜராத் தரப்பில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.