SRK: "என் கரியரில் மிகச் சிறிய வழக்கு..." - ஆர்யன் கான் வழக்கு குறித்து சமீர் வான்கடே பேசியதென்ன?
நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (Aryan Khan) போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்தபோது, அவ்வழக்கின் விசாரணையைத் தலைமை தாங்கியவர் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல தலைமை அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே (Sameer Wankhede).
அக்டோபர் 2021-ல் உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆர்யன் கான் 25 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பல ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மே 2022-ல் ஆர்யன் கான் முழுமையாக வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்தக் காலகட்டம் ஷாருக் கான் மற்றும் ஆர்யன் கானுக்குச் சவாலான காலகட்டமாக அமைந்தது. இந்த நேரத்தில் ஊடக வெளிச்சத்திலிருந்த மற்றொரு நபர் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே.
இந்த வழக்கில் சமீர் வான்கடே நிதி மற்றும் நடைமுறை முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே பணம் பெற்றாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சமீர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தும், அந்த வழக்குப் பற்றியும் பேசினார்.
அவர் செலபிரிட்டிகளை குறிவைத்து பணியாற்றுவதாக எழுந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த அவர், "என் தனிப்பட்ட வாழ்விலும், பணி வாழ்க்கையிலும் 'செலபிரிட்டி' என்ற சொல்லை அங்கீகரிப்பதில்லை. சிலர் நான் உயர்மட்ட நபர்களின் மேல் கவனம் செலுத்துவதாக உணர்ந்தாலும் அது உண்மையில்லை. நான் 3,400 வழக்குகளைக் கையாண்டிருக்கிறேன். அதில் சாதாரண மனிதர்களைப் பற்றிய வழக்குகள் ஹெட்லைன்ஸில் இடம்பெறுவதில்லை. நான் என் கடமையைச் செய்கிறேன். அதில் சில வழக்குகள் பரபரப்பாகப் பேசப்படுவது என் கையில் இல்லை" எனப் பதிலளித்தார்.
ஷாருக்கான் மகன் வழக்கு குறித்துப் பேசும்போது, "ஷாருக் கான் வழக்கை என் பணி வாழ்க்கையில் கையாண்ட மிகச் சிறிய வழக்காகவே நினைக்கிறேன். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என் நேரத்தை வீணடிக்க நினைக்கவில்லை." என்றார்.
மேலும், "நான் எதையும் மறைக்கவில்லை, எதற்கும் அச்சப்படவுமில்லை. 'இந்த வழக்கு குறித்து நான் பேசமாட்டேன்' என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாலேயே அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன். நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு அது பற்றி விரிவாகப் பேசுவேன்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...