Sundara Travels 2: `டேய் அழகா...!'-கருணாஸ் - கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் சுந்தரா டிராவல்ஸ் 2
முரளி - வடிவேலு கூட்டணியில் உருவாகி கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `சுந்தரா டிராவல்ஸ்'.
இப்படத்தின் காமெடி எலமென்ட்டுகள் பலருக்கும் அவ்வளவு ஃபேவரைட். `ஈ பறக்கும் தளிகா' என்ற மலையாளப் படைப்பின் தமிழ் ரீமேக்தான் `சுந்தரா டிராவல்ஸ்'. அப்படத்தின் ரசிகர்களுக்கு தற்போது ஒரு ட்ரீட் மெசேஜ் வந்திருக்கிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
இந்த இரண்டாம் பாகத்துக்கு `சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தை மலையாள இயக்குநர் தாஹா இயக்கியிருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குநர் கருப்பு தங்கம் இயக்கி வருகிறார்.
முதல் பாகத்தில் மறைந்த நடிகர் முரளியும் , நடிகர் வடிவேலுவும் ஐகானிக் காம்போவாக ஜொலித்திருப்பார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் கருணாஸும் கருணாகரனும் முன்னணி கதாபாத்திரங்களில் களமிறங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு செல்வா. ஆர், படத்தொகுப்புக்கு பி.சி. மோகன் என முதல் பாகத்துக்கு களமிறங்கிய அதே தொழில்நுட்பக் குழு இந்த இரண்டாம் பாகத்திலும் பணியாற்றி வருகிறார்கள். கொடைக்கானல், பன்றிமலை போன்ற பகுதிகளின் அடர்ந்த வனப்பகுதிகளிலும் , தென்காசி, காரைக்குடி, சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கருப்பு தங்கம், `` இந்த கதையில் ஒரு பஸ்தான் ஹீரோ. அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருக்கிறோம். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்ஸை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்றார்போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்." எனக் கூறியிருக்கிறார்.