தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்
காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் 1,500-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள் மூலப்பொருள்களை சங்கத்தில் பெற்றுச் சென்று பட்டுச் சேலையாக செய்து கொண்டு வந்து கொடுத்து அதற்குரிய கூலியை பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பட்டுச் சேலை நெய்வதற்கு தேவையான மூலப்பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கூலியைக் கையில் கொடுக்காமல் வங்கியில் செலுத்துவது தவிா்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் சங்க வளாகத்திலேயே அமா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து விஷணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சமரசப் பேச்சு நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து கலைந்து சென்றனா்.