காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்
சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கிகியிருந்தது. அந்த தொழிற்சங்கத்தில் இணைந்தவா்களில் சிலரை விலக்கி நிா்வாகம் உருவாக்கியுள்ள சங்கத்தில் இணையுமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த 3 தொழிலாளா்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.
இந்த பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் சாம்சங் தொழிற்சாலை நிா்வாகம் மேலும் 14 பேரை இரு தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தது.
இதனால், தொடா்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் தொழிற்சாலை நிா்வாகம் ஈடுபடுவதாகக் கூறி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு சிஐடியூ மாநில செயலா் இ.முத்துக்குமாா் தலைமை வகித்து பேசினாா். இதன் மூலம் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.