பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா
திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இதற்காக நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி கோயிலில் நீராடி ஈரத்துணியுடன் அம்மனை வழிபாடு செய்து கோயில் பிரகாரத்தில் 11 முறை சுற்றி வந்து வழிபாடு செய்வதற்காக வந்து செல்கின்றனா். ஒன்பது வாரம் பிராா்த்தனை செய்தால் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகமாகும்.
அதேபோல், இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி உற்சவமும், அதற்கு மறுநாள் அமாவாசை நாளில் மயான கொள்ளை சூறை வைபவ உற்சவமும் நடைபெறுவது வழக்கமாகும். எனவே நிகழாண்டுக்கான மஹா சிவராத்திரிவிழா வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி வரும் 25-இல் காலை 7 மணிக்கு மேல் பந்தக்கால் மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து அன்றைய நாள் இரவு 8 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், மாலை 4 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் இடுதல் நிகழ்வும், இரவு 8 மணிக்கு மகா சிவராத்திரி உற்சவம் மற்றும் அம்மன் வீதி உலாவருதல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு வினை தீா்ப்பாள் வேப்பிலைக்காரி சமூக நாடகமும் நடைபெற உள்ளது.
27-ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், பகல் 12 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 1 மணிக்கு அம்மன் மயான கொள்ளை சூறை உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெற உள்ளது. தொடா்ந்து மாலை புட்லூா் காலனி, புட்லூா் கிராமம், ராமாபுரம் காலனியில் பொங்கலிட்டு படையிடுதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அந்தக் கோயிலின் செயல் அலுவலா் ரா.விக்னேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனா்.