சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
Syria: 2 நாள் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை... சிரியாவில் நடந்த கோர சம்பவம்..
சிரியாவில் உள்நாட்டு கலவரம்
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இரண்டு நாள்களாக நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் உள்ள `மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு' இதனை உறுதிப்படுத்தியது. இவர்களில் பெரும்பாலோர் நெருக்கமான தூரத்தில் இருந்து சுடப்பட்டவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
வெளியேற்றப்பட்ட அதிபர் பாஷர் அல்-அசாதின் ஆதரவாளர்களுக்கும் சிரியா நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே இரண்டு நாள்களாக நடந்த மோதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக போர் கண்காணிப்பு குழு சனிக்கிழமை தெரிவித்தது. இது 14 ஆண்டுகளுக்கு பிறகு சிரியாவில் நடந்ததிலேயே மிகவும் மோசமான நிகழ்வு என்று கூறுகிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.
இந்த கடும் மோதலில் பொதுமக்கள் 745 பேரும், அரசாங்க பாதுகாப்புப் படையினர் 125 பேரும், அசாத் ஆதரவாளர்கள் 148 பேரும் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மோதலால் லத்தாக்கியா நகரத்தைச் சுற்றியுள்ள பரந்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசுக்கும் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலுக்கு பதிலடியாக தனிப்பட்ட நபர்கள் மீதான கொலைகளும் அரங்கேறின. அரசுக்கு ஆதரவான சன்னி முஸ்லிம் ஆயுதபடையினரால் அசாத்தின் அலாவைட் பிரிவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டன.
இது முன்னாள் அரசாங்கத்தை வீழ்த்தியதில் முன்னணியில் இருந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவிற்கு ஒரு பெரிய பின்னடைவை தந்தது. பல பத்தாண்டுகளாக அசாத்தின் ஆதரவு அடித்தளத்தில் அலாவைட்கள் பெரும் பகுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலாவைட்
ஆயுதபடையினர் தெருக்களிலும் வீடுகளின் வாசலிலும் அமர்ந்திருந்த அலாவைட் ஆண்களை சுட்டுக் கொன்றதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மேலும் அலாவைட்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, பின்னர் அதற்கு தீ வைத்ததாகவும் கூறினர். இதனால் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கானோர் அருகிலுள்ள மலைகளுக்கு தப்பியோடியுள்ளனர்.
பல உடல்கள் தெருக்களில் சிதறிக் கிடந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் பல உடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றை எடுத்து புதைக்கக் கூட யாரும் இப்போது இல்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர். இந்த மோதலில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான பனியாஸை சேர்ந்தவர்கள். மேலும் கொல்லப்பட்ட அவர்களின் அண்டை வீட்டில் உள்ள 5 பேரின் சடலங்களை அகற்றுவதை ஆயுதபடையினர் பல மணி நேரம் தடுத்ததாகவும் கூறினார்கள்.

அலி ஷெஹா எனும் பனியாஸ் நகரைச் சேர்ந்தவர், அங்கு நடந்த வன்முறையால் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமையே அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தொலைபேசியில் பேசிய அவர், ஆயுதபடையினர் தனது அபார்ட்மெண்ட் கட்டிடத்திலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் கூடியிருந்ததாகவும், வீடுகள் மற்றும் குடியிருப்பாளர்களை நோக்கி குறிபார்த்து சுடுவதுடன், சில நேரங்களில் குடியிருப்பாளர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டு, அவர்களின் மதம் மற்றும் பிரிவைச் சரிபார்த்த பின்னர் கொன்றதாகவும் தெரிவித்தார். ஆயுதபடையினர் சில வீடுகளை தீ வைத்ததுடன், கார்களை திருடியும் வீடுகளை கொள்ளையடித்ததாகவும் அவர் கூறினார்.
மனித உரிமை கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவரான ரமி அப்துரஹ்மான், பழிவாங்கும் கொலைகள் சனிக்கிழமை அதிகாலையில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு இந்த குழு வழங்கிய புள்ளிவிவரம் 600-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறியது. இதன் பிறகு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சிரியாவின் வடமேற்கு கிராமமான அல்-ஜனூதியாவில், சிரியா கடற்கரையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட நான்கு சிரியா பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சனிக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பிரதேக் குழியில் அடக்கம்
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு படையினர் அசாத் ஆதரவாளர்களின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் அத்துமீறல்களை தடுக்க கடற்கரை பிராந்தியத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
சனிக்கிழமை காலையில், மத்திய கிராமமான துவாய்மில் முந்தைய நாள் நடத்தப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 31 பேரின் உடல்கள் ஒரு பிரதேக் குழியில் அடக்கம் செய்யப்பட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒன்பது குழந்தைகளும் நான்கு பெண்களும் இதில் அடங்குவர். பிரேதக் குழியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள வெள்ளைத் துணியால் மூடப்பட்ட உடல்களின் புகைப்படங்களை அங்குள்ள செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர் அவர்கள்.
லெபனானின் நாடாளுமன்றத்தில் அலாவைட் பிரிவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஹைதர் நாசர், பாதுகாப்புக்காக பொதுமக்கள் சிரியாவிலிருந்து லெபனானுக்கு தப்பியோடுவதாகக் கூறினார். அது குறித்து சரியான எண்ணிக்கை தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவிலுள்ள ஹமெய்மிம் ரஷ்ய விமானத் தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும், சிரியாவின் குடிமக்களாகவும் தங்கள் நாட்டிற்கு விசுவாசமாகவும் உள்ள அலாவைட்களை சர்வதேச சமூகம் பாதுகாக்க வேண்டும் என்றும் நாசர் கூறினார். அசாத் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து, பல அலாவைட்கள் தங்கள் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் மேலும் புதிய அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொண்ட சில முன்னாள் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் அசாத்தின் கீழ், அலாவைட் பிரிவினர் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வந்தனர். புதிதாக அமைந்த அரசாங்கம் கடந்த சில வாரங்களாக நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான தாக்குதல்களுக்கு அவரது ஆதரவாளர்களை குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மத அடிப்படையிலான வன்முறைகளை குறித்து பிரான்ஸ் தனது வேதனையையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

இந்த குற்றங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையோடு நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதை சிரியா இடைக்கால அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் கோரிக்கையும் விடுத்துள்ளது.
பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யயும் நோக்கோடு சர்வதேச மகளிர் தினத்தை நேற்று கொண்டாடினோம். ஆனால் அதே தினத்தில் சிரியாவில் பெண்கள், சிறுமிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஈவு இறக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
