``பாஜக - நோட்டாவுக்கு போட்டி; தவெக ஒரு பொருட்டே இல்லை..'' - புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி தடாலடி
`நோட்டாவுடன் போட்டி..' - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
"பா.ஜ.க-வினர் முன்னாடி மிஸ்டு கால் கொடுத்து அவர்களது கட்சிக்கு ஆள் சேர்த்தனர். அதேபோல் தான், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் மும்மொழிக்கு ஆதரவாக கையொப்பமிட்டு இருப்பார்களே தவிர, மொழிக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் யாரும், தமிழ் பற்று உடையவர்கள் யாரும் கையெழுத்திட்டிருக்க மாட்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இன்றும் பா.ஜ.க நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மற்ற கட்சிகளோடு சேர்ந்து பா.ஜ.க வாக்கு வாங்கி இருப்பார்களே தவிர, அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாக்குகள் அதிகரிக்கவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க காலூன்ற முடியாது.

அமலாக்கத்துறை...
ஒன்றிய அரசின் கையில் அமலாக்கத்துறை இருக்கிறது. யார் மீது வேண்டுமென்றாலும் ஏவி விடலாம். எந்த சோதனை வேண்டும் என்றாலும் நடத்தலாம். அதற்கெல்லாம் தக்க பதிலை நிச்சயம் எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். சோதனைகளில் எந்தவிதமான தவறான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை என்பது ஒன்றிய அரசின் ஒரு பழிவாங்கும் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம். சிலரை குறிப்பிட்டு அவர்கள் வளர்ச்சியை தடுப்பதற்காக இதுபோன்ற சதி செயல்களில் ஈடுபடலாம். அமலாக்கத் துறையை பொறுத்தவரை பல இடங்களில் சோதனை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் வழக்கு தொடர்ந்திருப்பது என்பது சதவீதம் அடிப்படையில் குறைவுதான். அதிகாரம் இருப்பதால் அச்சுறுத்தலுக்காக சோதனையை செய்கின்றனர். அதற்கு எதுவும் செய்ய முடியாது. அதற்கு பயப்பட மாட்டோம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
சொத்துகளை முடக்கினாலும் ஒரு காலகட்டத்தில் நீதிமன்றத்திற்கு சென்று நிச்சயமாக மீட்போம். சொத்துகளை முடக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அதை மீட்பதற்கு எங்களுக்கும் அதிகாரம் இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைப் பற்றி திரும்பி திரும்பி கேட்கிறீர்கள். அரசியல் கட்சிகளைப் பற்றி கேளுங்கள். உங்களுக்கு வேண்டுமென்றால், வரும் 2026 - ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் இருக்கலாம் என்று கூறலாம். எங்களைப் பொறுத்தவரை அது இல்லை.
சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் ஏமாளிகள் அல்ல. யார் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்... யார் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்...இதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். அதேபோல், அவர்களுக்கு உண்மையான நண்பன் யார்.. அவர்களுக்கு என்றைக்குமே தோழமையோடு இருக்கக்கூடியவர்கள் யார் என்பது சிறுபான்மையின சமூக மக்களுக்கு நன்றாக தெரியும். அது, திராவிட இயக்கங்களை தவிர, அதுவும் தி.மு.க-வைத் தவிர எந்த கட்சியையும் நம்ப தயாராக இல்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை என்பதில், மற்றவர்களிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறார்கள். நாங்களாக சென்று கூறியதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரின் அடிப்படையில் தான் நடவடிக்கை. மற்றபடி, தன்னிச்சையாக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க கூறவில்லை.
டாஸ்மாக் நேரம்..
எங்களைப் பொறுத்தவரை பகல் 12 மணிக்கு தான் டாஸ்மாக் திறக்க வேண்டும். அதற்கு முன்னால் திறந்து விற்பனை செய்தால் தவறுதான். அதற்கு, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். டாஸ்மாக் அதிகாரிகளும் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார்கள். குட்கா வழக்கை விசாரணை செய்யும் துறையின் சார்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கூடுதலான குற்றங்களை குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்வது என்பது இயற்கைதான்.
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள்
முன்னாள் அமைச்சர்கள் 7, 8 நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மீது வழக்கை தாக்கல் செய்துள்ளோம். அவர்கள் வாய்தா கேட்டு நேரம் வாங்கி செல்கின்றனர். அதற்கு நாங்கள் பொறுப்பாக ஆக முடியாது.
குற்றச்சாட்டு உள்ளவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோமா, இல்லையா என்பதை தான் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பார்க்க வேண்டும். நாங்கள் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.
ஆளுநர்
ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தால் அதனை வரவேற்கிறோம். ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதனை அவர் தக்க வைத்துள்ளார் என்று நினைப்போம். அதில், புதுமை ஒன்றும் கிடையாது.

புழல் சிறை
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சென்று பார்த்து புழல் சிறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டினார்கள். இன்று சிறைகளில் சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டு, சிறைவாசிகள் மரியாதையோடு நடத்தப்பட்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டு. அவர்களுக்கு ஊதியம் தரப்பட்டு மாதாமாதம் அவர்களது இல்லத்திற்கு ஊதியத்தை அனுப்புகின்ற நிலையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிற அரசு தான் மு.க.ஸ்டாலின் அரசு. மனசாட்சி உள்ளவர்கள் இதை மறுக்கமாட்டார்கள். மனசாட்சி இல்லாதவர்கள் திட்டினால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. குற்றம் சுமத்துபவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது மாதிரிதான் இது. ஆனால், அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை' என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
