தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்! - புதிய விதிமுறைகள் என்ன?
Tardigrades: விண்வெளியில் 'நீர் கரடிகள்' குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் - ஏன் தெரியுமா?!
விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு வாரங்கள் தங்கியிருக்கும்போது மேற்கொள்ளும் அறிவியல் பரிசோதனைகளில், டார்டிகிரேடுகள் குறித்து ஆராய்வதும் அடங்கும்.
டார்டிகிரேடுகள் என்று அழைக்கப்படும் நீர்க்கரடிகளின் உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
பொதுவாக விண்வெளியில் டார்டிகிரேடுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. விஞ்ஞானிகள் ஏன் இந்த எட்டுக்கால் உயிரினங்களை (டார்டிகிரேடுகள்) ஆய்வு செய்கிறார்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

டார்டிகிரேடுகள் குறித்து விண்வெளியில் ஆய்வு ஏன்?
நீர்க்கரடிகள் (டார்டிகிரேடுகள்) சுமார் 600 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நீர் வாழ் விலங்குகள் ஆகும். இதுவரை நடந்த ஐந்து பெரிய பேரழிவு நிகழ்வுகளிலும் அவை தப்பிப்பிழைத்துள்ளதாகவும், மனித குலம் அழிந்த பிறகும் அவை நீண்ட காலத்திற்கு பிறகும் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த நீர்க்கரடிகள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. உயர்ந்த மலைகள் முதல் ஆழமான பெருங்கடல் வரை எல்லா சூழலிலும் காணப்படுகின்றன.
கடுமையான சூழ்நிலையில் உயிர்வாழும் திறனுக்காக இந்த டார்டிகிரேடுகள் அறியப்படுகின்றன.
விண்வெளியில் அவற்றின் உயிர்வாழும் வழிகாட்டு முறையை படிப்பதன் மூலம் கதிர்வீச்சு மற்றும் நுண்ணுயிர்ப்பு விசையிலிருந்து பாதுகாப்பதற்கான உத்திகளை கண்டுபிடிக்க முடியும் எனவும் பாதுகாப்பு நுட்பங்களை மேம்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
விஞ்ஞானிகளுக்கு இது எப்படி உதவும்?
டார்டிகிரேடுகள் மீள்தன்மை கொண்ட உயிரினங்களாக உள்ளன. இவை மிகவும் கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழும் தன்மையை கொண்டுள்ளது.
நீர்க்கரடிகள் மைனஸ் 272.95 டிகிரி செல்சியஸ் அல்லது 150 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கும். விண்வெளியின் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் 40,000 கிலோ பாஸ்கல்ஸ் அழுத்தத்தைத் தாங்கும் தன்மையைக்கொண்டுள்ளன.
மேலும் 30 ஆண்டுகள் ஃப்ரீசரில் சேமித்து வைத்த பிறகும் உயிர்வாழும் என்று ஃப்ரண்ட் லைன் ஜெனோமிக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் நோக்கமே, இந்த விலங்குகளை மீள்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு காரணமான மரபணுக்களை அடையாளம் காண்பதாகும்.
உதாரணமாக, டார்டிகிரேடுகளின் உயிர்வாழும் வழிமுறைகளைப் பயன்படுத்தி, விண்வெளி கதிர்வீச்சிலிருந்து விண்வெளி வீரர்களை சிறப்பாகப் பாதுகாக்கும் உத்திகளைக் கொண்டு வரலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
விண்வெளிக்கு முதலில் சென்றது எப்போது?
2007 ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஃபோட்டான்-எம்3 பயணத்தில் சுமார் 3,000 குட்டிகள் விண்வெளிக்குச் சென்றதிலிருந்து, டார்டிகிரேடுகள் விண்வெளிப் பயணங்களின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.
டார்டிகிரேடுகள், விண்கலத்தின் பக்கவாட்டில் ஒரு சிறிய வட்டப் பெட்டியில் வைக்கப்பட்டு, அதன் மூடி விண்வெளியில் திறக்கப்பட்டது. பூமிக்குத் திரும்பியதும், அவை மீண்டும் நீரேற்றம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த பரிசோதனையை மேற்கொண்ட ஜெர்மன் மற்றும் ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள், பல நீர்க்கரடிகள் கடுமையான விண்வெளி சூழலில் உயிர் பிழைத்தது மட்டுமல்லாமல், சில வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்ய முடிந்தது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.