போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்க...
Travel contest : இயற்கையை விரும்புபவர்களுக்கு செம ட்ரீட்... பொள்ளாச்சி ‘டாப்சிலிப்’ போலாமா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பொள்ளாச்சிக்கு அருகே உள்ள மிக அருமையான இடம் டாப்சிலிப். வேட்டைக்காரன் புதூரை தாண்டி சென்றால், வனத்துறையின் சோதனை சாவடி உண்டு. அங்கு நமது வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பிறகே, மேலே செல்ல அனுமதிப்பார்கள்.
மதுபானம், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் போன்ற பொருட்கள் மலைக்கு மேலே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தோடு, டாப்சிலிப் சுற்றுலா சென்றோம். வழி நெடுகிலும் வண்ண வண்ண மலர்களும், வன விலங்குகளையும் பார்க்க நேர்ந்தது. யானை, காட்டெருமை, மான், சிங்கவால் குரங்கு போன்றவற்றை, மலைப்பாதைக்கு மிக அருகையே கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நகர வாழ்க்கையில் சிட்டுக்குருவியை கூட பார்க்க முடியாத நாம், டாப்சிலிப் வனப்பகுதியில் பயணிக்கும்போது, பல்வேறு பறவைகளை பார்த்தோம். பெரும்பாலான பறவைகளுக்கு பெயர் தெரியவில்லை. டாப் சிலிப்பை நெருங்கிய உடன் அங்கேயும் ஒரு சோதனைச் சாவடி. அங்கும் வாகனத்தை சோதனை செய்கிறார்கள்.
பைசன்
டாப்சிலிப் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடம். இங்குள்ள வீடுகள், காட்டேஜ், டார்மெட்டரி அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது. நான் வனத்துறையின் இணையதளத்திலேயே, காட்டேஜ் முன்பதிவு செய்திருந்தேன். ‘பைசன்’ பெயர் கொண்ட வீடு நமக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
குறிஞ்சி, முல்லை, மருதம் போன்ற பெயர்களிலும் காட்டேஜ் உண்டு. நாங்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றிலும் பசுமை புல்வெளி. அந்தி சாயும் நேரத்தில் நூற்றுக்கணக்கான மான் கூட்டம் மேய்ச்சலுக்கு வருகின்றன. அவை பசுமையான புல்களை மேய்வதையும், ஒன்றுக்கொன்று சண்டையிடுவதையும், மிக நெருக்கத்தில் பார்க்கலாம்.
டாப்சிலிப்பை பொறுத்தவரை இங்கே கடைகள் எதுவும் கிடையாது. வனத்துறைக்கு சொந்தமான கேண்டீன் உண்டு. டீ, காபி கிடைக்கும். காலை டிபன், மதிய உணவு, இரவு உணவு, முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும். குடும்பத்தோடு வருபவர்கள் காட்டேஜ்களில் தங்கலாம். நண்பர்கள் குழுவாக வந்தால், டார்மெட்டிரியில் தங்கலாம். சாப்பாடு கேண்டீன் தவிர வேறு வாய்ப்பு இல்லை.
டாப்சிலிப் செல்பவர்கள் யானை சபாரியை மிஸ் பண்ணக்கூடாது. காலையும், மாலையும் வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் காட்டுக்குள் அழைத்து செல்வார்கள். யானைக்கு உணவு வழங்குவதை பார்க்கலாம்.
போகும் வழியில் காட்டு யானைகளையும் பார்க்க முடியும். இதற்கும் வனத்துறையின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். நான் அங்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றேன். அன்றைய தினம் முன்பதிவு நிறைவடைந்துவிட்டதாக கூறிவிட்டனர். அதனால். யானையை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
இதனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, “பக்கத்தில் தான் பரம்பிக்குளம் இருக்கிறது. அது கேரளா எல்லைக்கு உட்பட்டது. உங்களது காரில் போக அனுமதி கிடையாது.
இன்னும் கொஞ்சநேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து தமிழ்நாடு அரசு பேருந்து வரும். அதுல போய்ட்டு வாங்க. அருமையாக இருக்கும்…” என்று வனத்துறை கேண்டீனில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சொன்னார்.
சரின்னு அங்கே பேருந்துக்காக காத்திருந்தோம், மாலை 5 மணி அளவில் அரசு பேருந்து வந்தது. அதில் ஏறி பயணம் செய்தோம். முழுக்க முழுக்க காட்டுக்குள் பயணம். மயில்களும், மான்களும் கூட்டம் கூட்டமாக நின்றன.
வன விலங்குகளை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காகவே, முன் இருக்கையை தேர்வு செய்து உட்கார்ந்து கொண்டோம். 5 கி.மீ தூரம் சென்ற உடனே, கேரள மாநிலம் உங்களை வரவேற்கிறது என பலகை இருந்தது. ஆகா, அடுத்த மாநிலத்திற்கு வந்துவிட்டோம் என்ற ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
அங்கிருந்த சோதனை சாவடியில், பேருந்தை நிறுத்திய கேரள போலீஸார் பேருந்தில் ஏறி,எல்லா பயணிகளின் உடமைகளையும் பரிசோதித்தனர். குறிப்பாக மூட்டைகளை பிரித்து பார்த்தனர். மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்க இந்த சோதனையா. வழக்கம்போல் இந்த சோதனை நடத்தப்படும் என, பேருந்தின் நடத்துனர் சொன்னார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக மலைகளுக்கு நடுவே, வளைந்து நெளிந்து சென்றது யாத்திரை. பேருந்து பயணத்தின் போது பரம்பிக்குளம் அணைக்கட்டு பார்த்தோம். வனப் பகுதியில் தான் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை அணைகள் கட்டி தமிழகத்திற்கு திருப்பி, அதனை விவசாயத்திற்கும் மின்சார தயாரிப்பிற்கும் தமிழ்நாடு பயன்படுத்துகிறது.
பரம்பிக் குளம் அணையில் தேங்கும் தண்ணீர் சுரங்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் காடம்பாறை நீரேற்று மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக, பேருந்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் விளக்கி கூறினார். பரம்பிக்குளம் சென்றோம். அங்கே ஒருசில கடைகள் இருந்தன. இரவு உணவை அங்கே வாங்கிவிட்டு, நாங்கள் சென்ற பேருந்திலேயே, மீண்டும் டாப்சிலிப் திரும்பினோம்.

நாங்கள் இரவில் தங்கியிருந்த காட்டேஜ் அருகேயே, நள்ளிரவில் விலங்குகளின் சத்தம் கேட்டன. ஆனால், என்ன விலங்கு என யூகிக்க முடியவில்லை. நாங்கள் கதவை திறக்கவே இல்லை. காலையில் விடுதி அருகே புள்ளி மான் கள், சிங்கவால் குரங்கு, மலபார் அணில், காட்டெருமை போன்ற விலங்கினங்கள் உலாவிக்கொண்டிருந்தது. அவற்றையெல்லாம் பார்த்து ரசித்துவிட்டு, நாங்கள் அங்கே இருந்து கிளம்பி விட்டோம்.
சி.அ.அய்யப்பன்
சென்னை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.