நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
Travel Contest: கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? - ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது வழக்கத்திற்கு மாறுபட்ட பயணக்கட்டுரை. அப்புறம் குறை சொல்லக்கூடாது.
கனவு தேசம் எது என்று கேட்டால், நம்மில் பெரும்பான்மையோர் 'அமெரிக்கா' என்று கனவிலும் சொல்லிவிடுவார்கள். என் சொந்தம் 60 வயது பெண்மணி அமெரிக்கா செல்ல விருப்பப்பட்டு மூன்று முறை முயற்சித்தும் சுற்றுலா விசா கிடைத்தப்பாடில்லை.
என் தங்கை அமெரிக்காவில் கான்பெரன்ஸ் செல்ல விசா கேட்டால், விசா கிடைத்தது கான்பெரன்ஸ் முடிந்த பின்னர். அமெரிக்கா விசா இன்டெர்வியூவிற்கு எப்படி எல்லாம் நம்பும் விதத்தில் பதிலளிக்க வேண்டுமென்று ஒத்திகை பார்ப்பார்கள். ஹைட்ரபாத் 'விசா பாலாஜி கோயில்'க்கு சென்று வேண்டினால் விசா நிச்சயம் என்று நம்புபவர்கள் ஏராளம்
சரி, அப்படியான கனவு தேசம் நிஜத்தில் எப்படி இருக்கிறது என்று பட்டுத் தெரிந்துக் கொள்ள முனைந்தேன்.

என் மகன் இருக்குமிடமான பால்டிமோர்-க்கு நான், மனைவி, மாமியார் ஏர்பிரான்ஸ் மூலம் பெங்களூருலிருந்து புறப்பட்டோம். பாரிசில் 4 மணி நேரம் இடைநிற்றல். பின்னர் வாஷிங்டன்DC புறப்பாடு. மொத்தம் 25 மணி நேரத்தித்திற்குப் பிறகு வாஷிங்டன்DC வந்தடைந்தோம்.
என் மாமியார் 80+ வயது என்பதால் ஏர்போர்ட்டில் வீல்சேர் உதவியாளர் சேவைக் கேட்டிருந்தோம். வாஷிங்டனில் இறங்கிய பிறகு, ஒரு நீக்ரோ பெண்மணி உதவியாளர் எங்களை வழிநடத்திச் செல்ல வந்தார்.
எந்தவித தடங்கலின்றி விரைவாகச் செல்ல முடிந்தது. எங்கள் உடமைகளை எடுத்துச்செல்ல வசதியாகயிருக்க டிராலி ஒன்றை இழுக்க அது வராமல் அடம் பிடித்தது. அந்த உதவியாளர், "ஓ, அமெரிக்காவுக்குப் புதுசு? அமெரிக்காவில் எதுவும் இலவசமில்லை. 5 டாலர் போட்டுத்தான் எடுக்க வேண்டும்" என்றார்.

இம்மிகிரேஷன் முறைமைகள் விரைவாக முடிந்து விட வெளியே வந்தோம். அந்த உதவியாளர்க்கு 5 டாலர் டிப்ஸ் கொடுக்கப் பெரிய புன்னகை வெளிப்பட்டது.
செல்போன் பார்க்கிங் லாட்-லிருந்த எங்கள் மகன் பிக்கப் பண்ண வந்தான். (செல்போன் லாட் என்பது பொதுவாக விமான நிலையங்களில் அமைந்துள்ள ஒரு வாகன நிறுத்துமிடமாகும், அங்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு முன் காத்திருக்கலாம். இதுவொரு இலவச சர்விஸ்).
ஒரு மணி நேரத்தில் 80 கிமீ தூரத்தில் அவன் இருக்கும் அபார்ட்மெண்ட் இடத்திற்கு (Baltimore) வந்தடைந்தோம்
முதல் நாள் விநாயக சதுர்த்தியாக இருக்க, கொழுக்கட்டை, சுண்டலுடன் வெற்றிகரமான விஜயத்திற்காக வேண்டிக் கொண்டோம். இங்கே குறிப்பிட்ட நிகழ்வுகள் யாவும் செப்டம்பர் 2022 என்று மனதில் நிறுத்திக்கொள்ளலாம். மிகையான பனிக்காலம் ஆரம்பிக்கும் முன்.
கண்டுபிடியுங்கள் எட்டு வித்தியாசம் எனப் புதிர் போல், நமக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

திரவமான பெட்ரோலை காஸ் என்பார்கள். உலகமே மெட்ரிக் முறைக்கு மாறிய பின்னரும், பழைய பவுண்ட், அடி, கேலன், அவுன்சு, மைல், பாரன்ஹீட் என்று பத்தாம் பசலியாகத் தான் இருக்கிறார்கள்.
ஆராய்ச்சித் துறையில் மட்டும் மெட்ரிக் அளவுகளைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் ஒரு குழப்பம்: அமெரிக்கன் கேலன் 3.8 லிட்டர், பிரிட்டிஷ் கேலன் 4.5 லி. பிரிட்டிஷ் அளவு-மெட்ரிக் அளவு குழப்பத்தால் நாசா ஏஜென்சி 125 மில்லியன் டாலர் சாட்டலைட்டை இழக்க நேரிட்டது . இருந்தாலும் அமெரிக்கா பாடம் கற்றுக்கொண்டதா என்று தெரியவில்லை.

சாப்பாட்டு சாமாச்சாரங்கள்:
நம்மூரில் ஷாப்பிங்கில் சிறிதே அழகு என்பது மந்திரம். ரெண்டு ரூபாய்க்கு சன்ரைஸ் காபி பவுடர் போன்று அன்றாடம் உபயோகிக்கும் பலவித பொருட்கள் சிறிய பாக்-களில் கிடைப்பது போல் அங்கே பார்க்க முடியாது.
இங்கு 10 ரூபாய்க்கு 50 மில்லி ஐஸ்க்ரீம் சாப்பிட்ட நான் அங்கே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் 200 மில்லி இருக்க அதிசயித்தேன். ஒரு சில இந்தியன் மளிகைக்கடைகளில் சிறிய சைஸ் பாக்கெட் பொருட்கள் கிடைக்கக் கூடும். அப்படி நான் புதையல் போல கண்டது: 5ரூ பெறுமான பார்லே பிஸ்கேட் 1 டாலர்.
அதே போல் 100 மில்லி டீ கப் சாப்பிட்ட நாம், அவர்களின் காபி இல்லை டி கப் சைஸ்-களை பார்த்து மிரண்டு விடுவோம். அங்கே உடல் பருமன் தொந்தரவு பூதாகரமாயிருக்க பேக் சைஸ்களும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. நம் கார்ப்பொரேட் ஆசாமிகளும் அதே வித்தையை இங்கே புகுத்தப் பார்க்கிறார்கள் என்பது நாம் எச்சரிக்கை கொள்ள வேண்டியதொன்று.

'பெட்ரோல் தண்ணி மாதிரி’ :
எல்லோருக்கும் பொதுவாக தெரிந்தது நாம் லெஃப்ட் டிரைவிங் என்றால் அவர்கள் ரைட்- டிரைவிங். இரவிலும் ட்ராபிக் ரூல் மதித்து நடக்கும் அந்த பழக்கத்தை நாமும் பின்பற்றினால் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்து விடும்.
அங்கே பாதசாரிகளுக்கே முன்னுரிமை. நம்மூரில், நடைப்பயணிகளுக்கு 'சாவுகிராக்கி' பட்டம் கொடுத்து விட்டு ஜூம் என்று பறக்கும் 2, 4 சக்கர வாகன ஓட்டிகள். இங்கே பெட்ரோல் டீசலை விட விலை அதிகம். அங்கே டீசல்தான் விலை அதிகம். அவங்களுக்கு என்ன பெட்ரோல் தண்ணி மாதிரி என்பார்கள் நம்மவர்கள் அமெரிக்காவைப் பற்றி பேசும் பொது. ஆம், அது நிஜம் தான். 1 லிட்டர் பெட்ரோலும் தண்ணீரும் ஏறக்குறைய சமவிலை.
அமெரிக்கா உணவு பாக்கெட்டுகளில் உள்ள குறைகள் சில கவனித்தேன். தயாரிக்கப்பட்ட தேதி, விலை இருக்காது. காலாவதி தேதி இருக்கும். தயாரிப்பு நிறுவனம் பற்றியும் தகவல் இல்லை.
இந்தியா பேக்கேஜுகளில் எந்த பொருள் எந்த கம்பெனியில் தயார் செய்யப்பட்டது, தயாரித்த தேதி போன்றவை விவரமாக இருக்கும்.
அமெரிக்காவில் இந்த விவரங்கள் நான் பார்த்த வரை இருக்கவில்லை. மேலும், நியூட்ரிஷன் லேபிள் கூட ஒரு ஸ்புன் பொருளைச் சாப்பிட்டால் (ஒரு சர்விங்-க்கு) எவ்வளவு சத்து கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 100 கிராமுக்கு எவ்வளவு சத்து இருக்கும் என்ற விவரம் கிடையாது.

அரை நாள் முழுக்க இந்தியன் ஸ்டோரில் சுற்றி சுற்றி வந்து நம் இந்தியச் சமையலுக்கு வேண்டிய சாமான்களை அள்ளி போட்டுக்கொண்டு வந்தோம்.
சரி, ஓரளவு சாப்பாட்டு சாமாச்சாரங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து ஊர் சுற்றிப் பார்க்கலாமா ?
முதல் வாரம் முந்நூறு கிமீ தொலைவில் உள்ள நியூயார்க்-க்கு புளியோதரைச் கட்டுசாதம், தயிர்சாதம், முறுக்கு, போளி சகிதம் பயணப்பட்டோம். நம் ஊர் வெயிலே சுகமென்று சொல்லத்தக்கதாக நியூயார்க்யை சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்தான்.
முதலில் பார்த்தது, எல்லிஸ் தீவு பக்கத்திலுள்ள பழமையான ரயில்வே ஸ்டேஷன் - Central Railroad of New Jersey Terminal - CRRNJ .

அமெரிக்காவில் குடியேற திடமேற்கொண்ட மனிதர்கள் (புலம்பெயர்ந்தோர்) கடல் வழியே எல்லிஸ் தீவுக்கு வந்து பதிவு செய்த பின் ரயில் மூலம் இந்த ஸ்டேஷனிலிருந்துதான் அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களுக்குப் பயணப்பட்டார்கள். தற்போது இந்த நிலையம் உபயோகத்தில் இல்லை.
அக்கால பழமைகளை காமிராவில் படித்துக்கொண்டு எல்லிஸ் தீவு தேசியக் குடியேற்ற அருங்காட்சியகத்திற்குக் கப்பல் மூலம் சென்றோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் புலம் பெயர்ந்தவனாக அந்த மியூசியத்தில் உலா வந்தோம்.
பின்னர் சுதந்திர தேவியைக் கண்டுக்களிக்க கப்பலில் பயணித்தோம். பிரான்ஸ்-ன் வடிவைப்பாளர் முதலில் இத்தகைய சிலையை எகிப்தில் லைட்ஹவுஸ்-ஆக நிர்மாணிக்க இருந்தார். அது கைகூடாததால் பிரான்சின் அன்பளிப்பாக அமெரிக்காவுக்கு வழங்க நிச்சயக்கப்பட்டது (சுதந்திரமடைந்து 100 வருட நினைவாக).
சிலையின் உயரம் 151 அடி. பீடத்தையும் சேர்த்தால் 305 அடி . சிலையின் முன் போட்டோ எடுத்துக் கொண்டப் பிறகு நியூயார்க் நகரத்திற்குப் புறப்பட்டோம்.

ஹோட்டல் அறையில் சிறிது ஓய்வுக்குப் பிறகு 259 மீ உயர, 70 தளங்கள் கொண்ட ராக்பெல்லர் டவருக்குச் சென்று 360 டிகிரியிலும் நகரத்தைப் படம் பிடித்தோம். லிப்ட் வழியாக ஏறி செல்வதால் எனக்கு ஒன்றும் த்ரில் அனுபவமாகப்படவில்லை.
டவரில் ஏற 20$. இதுபோல் நம்மூரில் மலையேற காசு வசூலிக்க முற்பட்டால் என்னவாகும் என்று நினைத்துப் பார்த்தேன்.
நம்மூர் சரவணபவன் சுவை எப்படி?
வெளிநாட்டு வாசத்தில் நம்மூர் சரவணபவன் சுவை எப்படி என்று பரிசோதிக்க சிட்டி நடுவில் உள்ள அந்த ஹோட்டலுக்கு இரவில் விஜயம் செய்தோம். ஹோட்டல் முழுதும் நிரம்பியிருந்தது மகிழ்ச்சியான செய்தி.
டிஃபன்-ல் இட்லி, கிச்சடி, வடை, தோசை, ஜாமுன், ஆனியன் தோசை, ரவா தோசை என்று கிட்டத்தட்ட இருந்த எல்லா ஐட்டம்களையும் டேஸ்ட் பார்த்தோம். பரவாயில்லை, 4 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம்.
டிப்ஸ் கண்டிப்பாக பில்லில் 18% போட்டுவிடுகிறார்கள். வீட்டு எஜமானர்கள், 'வீட்டுத் துணைவி சும்மாதான் இருக்கிறார்கள்’ என்பவர்கள் தினமும் 18% கணக்கா கொடுத்துப் பாருங்கள். ஹவுஸ்-ஒயிப்ன் சேவையில் மறைந்துள்ள வருமானம் எவ்வளவு என்று. சரி, எதற்கு விவாதம்? நேரமாகிவிட்டது. தூங்கிவிட்டு நாளை பார்க்கலாம் நியூயார்கில் மீண்டும்.

காலையில் ஹோட்டலில் காம்ப்ளிமென்டரி காலை உணவை ஒரு பிடி பிடித்து விட்டு புகழ்ப் பெற்ற அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Night at the Museum - புகழ் பெற்ற ஆங்கில திரைப்படம் ஞாபகம் வரலாம்) காணச் சென்றோம். உலகைத்தையே மறக்க வைத்து விடும் அற்புதமாக அந்த காட்சியகம் இருந்தது .
பின்னர் 102 தளங்கள் கொண்ட 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்' (380 m) பார்க்கச் சென்றோம். 86வது மாடியிலிருந்துதான் திறந்த வெளி நகர-பார்வை கிடைக்கும். நியூயார்க்கிடம் விடைபெற்று திரும்ப பால்டிமோர்க்கு இரவில் வந்தடைந்தோம்.
இரண்டாவது வார கடைசியில் நையாகரா பால்ஸ் கண்டுகளிக்க கிளம்பினோம். பேக்கஜ் டூர் எடுத்து கொண்டதால், அவர்கள் வழிநடத்தி அழைத்து சென்றார்கள். Maid of the Mist என்ற கப்பலில் பால்ஸ்-க்கு மிக அருமையில் சென்றோம் . வார்த்தைகளால் எடுத்தியம்ப முடியாத அனுபவம் என்று சொல்லலாம்.
பால்ஸ்-லிருந்து வரும் மூடுபனி திரையில் மகிழ்ந்தோம் . மொத்தம் 2 மணி வரையிலான உலாவில் நனைந்து வெளிவந்தோம். இரவில், நயாகரா நீர்வீழ்ச்சி வண்ணமயமான ஒளி வெளிச்சத்தில் ஜொலிக்க, பட்டாசு வானவேடிக்கைகளைப் பார்க்க முடிந்தது. இது இரவு 10 மணியளவில் 5 நிமிடமே நடத்தப்படுவது ஏமாற்றமளிக்கிறது.

மூன்றாவது வாரம் தலைநகர் வாஷிங்டன்-க்கு புறப்பட்டோம். அமெரிக்கா ஜனநாயகத்தின் இருப்பிடமான CAPITOL பில்டிங்-யை வெளியே இருந்தே பார்த்தோம். பின்னர், நினைவகங்கள் அடங்கியப் பகுதிக்கு விரைந்தோம். உலகப்போர், கொரியன் போர், வியட்நாம் போர், லிங்கன், வாஷிங்டன் நினைவகம் எல்லாம் ஒரே இடத்தில இருக்கின்றன.
கடும் வெய்யிலில் சுற்றிப் பார்க்க 2 மணி நேரம் ஆயிற்று. பொதுவாக அமெரிக்காவில் ம்யூஸியம் நுழைவு இலவசமே. ஆனால், கார் பார்க்கிங் என்று மணிக்கணக்காக கொள்ளையடித்து விடுவார்கள்.

கடைசியாக, என் மகன் வசிக்கும் பால்டிமோர் நகரத்தில் நான் உலா வந்ததை சொல்லி விடுகிறேன். அமெரிக்க தேசிய கீதம் பிறந்த இடம், பால்டிமோர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் நினைவுச்சின்னம் பால்டிமோர்ல் உள்ளது .
Walter Museum of Art-ல் இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ரஷ்ய நாடுகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட கலைப் பொருட்கள் பிரமிக்க தக்கதாக இருக்கிறது .
கோயில் நகரம் கும்பகோணம் மாதிரி நான் இருந்த இடத்திலிருந்து அரை கிலோமீட்டர் சுற்றில் 7-8 சர்ச் பாத்தேன் . எல்லாமே குறைந்து 100 வருட பழமை கலை வண்ணமாக தென்பட்டன. நான் ஒரேயொரு சர்ச்சுக்குச் சென்றேன். அது இருநூறு வருட பழமை நிறைந்த வரலாற்று சிறப்பு மிக்கது.
பசிலிக்கா சர்ச் அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் ரோமன் கத்தோலிக்க கதீட்ரல் ஆகும். ஆனால், எங்கேயும் சர்ச்சில் ஞாயிறு அன்று கூட கூட்டம் காணவில்லை. ஆச்சரியமளித்தது.

அங்கே படித்த சரித்திர சோக சம்பவச் செய்தி: 1904ம் ஆண்டின் கிரேட் பால்டிமோர் தீ 30 மணி நேரம் எரிந்தது, 1500 கட்டிடங்களை அழித்தது. ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் சரியாக அணைக்கப்படாமல் தூக்கி எறியப்பட்ட சிகரெட்டால் தீ ஏற்பட்டதாம்.
தீயணைக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருந்தது பொருந்தாத குழாய் இணைப்புகளாம்!. அந்த சம்பவத்திற்குப் பின்னர் தான் அமெரிக்காவில் தீ தடுப்புக்கான தரநிலைகள் உருவாக்கப்பட்டன. சில சமயம் விபத்து பாடமாக அமைந்து விடுகிறது. ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை?.
இவ்வளவு இடங்களை நான் சொல்வதன் பின்னணி எது? 84 வயதுள்ள என் மாமியாரை வீல்-சேரில் அமர வைத்துக்கொண்டு சந்தடி மிக்க சாலைகளிலும், லிப்ட் போன்றவற்றிலும், டாய்லட் போவதாகிலும் எந்த சிரமமின்றி போக வர முடிந்தது என்பது குறிப்பிடத்தக்க அதிசயமாக விளங்கியது .

ஒன்று நிச்சயம் சொல்ல வேண்டும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. மாற்றுத்திறனாளிகளை நம்மை போன்று இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கும் வீல்-சேரில் சுலபமாகச் செல்லத்தக்கவாறு கட்டமைப்புகள் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
நம்மூரில் காட்சியைக் கொஞ்சம் ஓட்டுங்கள்: எலும்பு மருத்துவரின் கிளினிக் போக, அந்த காம்ப்ளெக்ஸில் 7-8 படிகள் ஏறிதான் அணுக முடியும். தொண்ணுறு சதவீத வளாகங்கள் மாற்றுத் திறனாளிகளுக்குச் சாவல் விடும் வகையில்தான் அமைக்கப்பட்டிருப்பது வேதனையான ஒன்று.
நம்மூரில், 5, 10 பைசா சில்லறைக்கு அடிதடி நடந்த சம்பவம் கேள்விப்பட்டிருப்போம். நான் இருந்த வரையில் (30 நாட்கள்) மளிகை கடையில் வாங்கிய போதேல்லாம் மீதி சில்லரைகள் சேர்ந்து நூறு 1 சென்ட், பத்து 5 சென்ட், பத்து 25 சென்ட் காயின்கள் கிடைத்தன (100 சென்ட் = 1 டாலர்).
ஞாபக சின்னமாக சிலது வைத்துக்கொண்டு மற்றவற்றை ஒரு சர்ச் உண்டியலில் போட்டு விட்டேன். நம் நாட்டில் எப்படி 10 ரூ காயின் ஒப்புக்கொள்ள தகராறு போல, அங்கேயும் டாலர் காயினை விட காகித டாலரைத் தான் விரும்புகிறார்கள். காயின் பாக்கெட்டில் இருந்தால் தங்கள் எடை கூடிவிடும் பயப்படுகிறார்கள் போலும்!.

வீட்டு உபயோக கருவிகளை இணைக்கும் சுவிட்ச் போர்டில் ஆஃப் சுவிட்ச்சே கிடையாது. மெஷினில் உள்ள ஸ்விட்ச் மூலம் தான் ஆஃப் செய்ய முடியும். மின் அழுத்தமும் ரொம்ப சீராக இருப்பதால், எந்த மெசினும் மின் அழுத்தம் காரணமாக வெடிப்பதோ இல்லை கெட்டுப் போவதோ அரிதினும் அரிது.
நம் நாட்டில், மின்னழுத்தம் அல்லது ஷார்ட்-சர்க்குட் காரணமாக பிரிட்ஜ் / டிவி/ ஏசி வெடித்து விபத்து, மனித உயிர்களும் பலி என்று செய்தித்தாள்களில் இன்றைக்கும் வந்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் விண்ணில் சேட்டலைட் செலுத்தும் திறன். ஆனால், சீரான மின் அழுத்தத்தில் மின் விநியோகம் செய்யமுடிவதில்லை? ஸ்டாபிலைசர் மற்றும் தடையற்ற மின் சப்ளை காட்ஜெட்-கள் இல்லா நடுத்தர வீடுகள் உண்டா?

"இது என்னடா வம்பாப் போச்சு!. அமெரிக்கா போனோமோ, நாலு இடத்தைச் சுத்திப் பாத்தோம்னு இல்லாம குறை-பட்டியல் வாசிக்க வந்துட்டான். இதெல்லாம் நம்ம அரசியல்வாதிகளுக்கோ, IAS-வாதிக்களுக்கோ தெரியாதா. பேசாம மூட்டையைக் கட்டி திரும்பி வந்திடு" ன்னு முணுமுணுப்பது கேட்கிறது. இதோ தாய் மண்ணில் கால் தடம் படிந்த பின்னர் என் மேற்படி எண்ணங்களை பதித்துள்ளேன்.
அமெரிக்காவின் சில பசுமையான பக்கங்களைப் பார்த்து விட்டோம். கரும் பக்கங்களை இன்னொரு தரம் பார்ப்போமே!

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - ‘சுற்றுலா”. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.