Travel contest: அந்தமான் யானை கதை தெரியுமா? ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு ரகம்; அந்தமான் சுற்றுலா அனுபவம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மூன்றாம் நாள் சற்று நிதானமாகவே பயணத்தை ஆரம்பித்தோம்.
ஷ்ரீ விஜயபுரம் ஃபெர்ரி ஜெட்டியில் இருந்து, ஜெட்டி என்பது ஃபெர்ரிகள் வந்து போகும் சிறு துறைமுகம். ஸ்வராஜ் தீப் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஹேவ்லாக் தீவுகள் அடைய சுமார் ஒரு மணி நேரக் கடல் பயணம்.
ஹேவ்லாக் தீவுகள் பிரிட்டிஷ் அரசில் பணியாற்றிய பிரிட்டிஷ் ஜெனரல் ஹென்றி ஹேவ்லாக்கின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது.
2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நேதாஜி இந்திய விடுதலைக்காக ஆற்றிய பங்கைக் கௌரவிக்கும் விதமாக ஸ்வராஜ் தீவுகள் என்று பெயர் மாற்றம் செய்தது.

ஃபெர்ரியில் ஏறும் முன், உங்கள் முன்பதிவுச் சீட்டு காண்பித்து போர்டிங் பாஸ் வாங்க வேண்டும். போர்டிங் பாஸ் வாங்கும் பொழுது நமது ஆதார் அட்டையையும் காண்பிக்க வேண்டும்.
பின்னர் நமது உடைமைகள் கொண்ட சூட்கேஸ்களை ஸ்கான் செய்தே உள்ளே அனுமதிப்பார்கள். சூட்கேஸ்களை ஸ்கான் செய்தபின் நம்மையும் ஸ்கான் செய்தே அனுமதிக்கிறார்கள்.
சூட்கேஸ்களை ஃபெர்ரி ஏறும் முன் நம்மிடமிருந்து பிரித்து நம்மை மட்டும் குளிரூட்டப்பட்ட காபினுள் அனுமதிப்பார்கள்.
சுருங்கச் சொன்னால் ஃபெர்ரியில் ஏற்றும் முன் விமானப் பயணத்தின் பொழுது நடைபெறும் அனைத்து பரிசோதனைகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.
ஃபெர்ரியில் பயணிக்க இரண்டு வகுப்புகள் உண்டு. ஒன்று லக்சுரி: மற்றது ராயல். ராயல் சற்று அதிக கட்டணம்.
விமானத்தில் விற்பது போன்றே பழச்சாறு அழகிய இளம்பெண்களால் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்வராஜ் தீவுகளில் நாம் பார்க்க வேண்டிய மூன்று முக்கிய கடற்கரைகள் உள்ளன. அவை
• காலா பத்தர் பீச்,
• ராதாநகர் பீச்,
• எலிஃபண்ட்டா பீச்.
காலா பத்தர் என்றால் கருப்பு பாறைகள் என்று பொருள். கரும் பாறைகள் கடற்கரை எங்கும் பரவலாகச் சிதறிக் கிடக்கின்றன. இந்த காலா பத்தர் பீச்சிலிருந்து சூரிய உதயம் பார்க்கலாம்.
அந்தமானில் சூரிய உதயம் பார்க்க ஒரு இடம் எனில் சூரிய அஸ்தமனம் பார்க்கத் தகுதியானது வேறொரு இடமாக இருக்கிறது.

அன்று சூரிய உதய நேரம் காலை 5.29. நாங்கள் காலை 4.30க்கே காலா பத்தர் பீச்சில் ஆஜராகி இருந்தோம்.
சூரியன் எங்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மேலே வந்து விட்டார்.
அடுத்து ராதா நகர் பீச் சென்றோம். ராதா நகர் பீச் ஆசியாவின் அருமையான கடற்கரையாகக் கருதப்படுகிறது. வெள்ளி மணல் பரந்து கிடக்கிறது.
ராதா நகர் பீச் நீந்த அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் ஒன்று. ராதா நகர் பீச்சில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையே மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அதேபோல் ராதா நகர் பீச்சில் பட்டாணி, சுண்டல் வியாபாரம் எல்லாம் கிடையாது.
சுற்றுலாவையே நம்பி வாழும் அந்தமான் வாசிகள் இந்த கட்டுப்பாடுகளுக்கு அடங்கியே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
கடற்கரையில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
அருமையான, அழகிய இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு ராதா நகர் பீச் அமைந்துள்ளது.
ராதா நகர் பீச்சிலிருந்து சூரிய அஸ்தமனம் பார்க்கலாம். நாங்களும் பார்த்தோம்.
இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்களே தவிர அந்தமான் முற்றிலும் பாதுகாப்பான ஒரு இடம். குறைந்த ஆபத்து கொண்ட இடம். அவ்வளவு கட்டுக்கோப்பாய் இருக்கிறார்கள்.
அடுத்து நாங்கள் போக வேண்டிய இடம் எலிஃபண்ட்டா பீச். ஆனால் நாங்கள் சென்ற அன்று ஏதோ கங்கை பூஜை நடைபெற்றதால் எலிஃபண்ட்டா பீச் எங்களால் போகமுடியவில்லை.
எலிஃபண்ட்டா பீச்சில் நீர் விளையாட்டுகள் நிறையக் காணலாம். ஸ்நோர்க்கலிங், ஸ்கூபா டைவிங், செமி சப்மரைன் பயணம், டிஸ்கோ ரைட், பனானா ரைட் இவற்றில் சில.
ஸ்கூபா டைவிங் நாம் நினைப்பது போல் அவ்வளவு சுலபம் இல்லை. ஸ்கூபா டைவிங் செய்ய 110 விதிகள் சொல்கிறார்கள். அவற்றில் சில,
• உங்கள் வயது 12 முதல் 50 வரை இருக்க வேண்டும்.
• கடந்த வருடத்திற்குள் அறுவை சிகிச்சை எதுவும் செய்திருக்கக் கூடாது.
• ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதிகளால் நீங்கள் அவதிப்படக் கூடாது.
இந்த விதிகளில் இரண்டு என்னைப் பாதித்ததால் நான் ஸ்கூபா டைவிங் செய்யும் அருமையான வாய்ப்பை இழந்தேன்.
காலா பத்தர் பீச், அழகிய ராதா நகர் பீச் பார்த்து எங்களது இரண்டு நாட்கள் கழிந்தன.

அருமையான உணவு உண்டோம். உணவு என்றவுடன், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அந்தமானில் அரிசி, பாசிப்பருப்பு, தேங்காய், வாழை மற்றும் பாக்கு மட்டுமே விளைகிறது.
உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பூண்டு போன்ற மற்ற அனைத்து தேவைகளும் இந்திய நிலப்பரப்பில் இருந்தே தருவிக்கப்படுகின்றன.
அருமையான இரவு உணவுடன் நான்காம் நாள் கழிந்தது.
நீல் தீவு என்று முன்பு அழைக்கப்பட்டு இப்பொழுது ஷாஹித்தீவு என அழைக்கப்படும் இடமே நாங்கள் ஐந்தாவது நாளில் சென்ற இடமாகும்.
நீல் தீவு 1857ஆம் ஆண்டு நடந்த இந்தியச் சிப்பாய் கலகத்தை அடக்கக் கொடுங்கோலை அவிழ்த்துவிட்ட ஆங்கிலேய பிரிட்டீஷார் ஜெனரல் ஜேம்ஸ் நீல் பெயரால் அழைக்கப்பட்டது.
2018இல் இந்திய அரசு நேதாஜி தலைமையில் இந்தியத் தேசியப் படை மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூரும் வகையில் தியாகிகளின் அல்லது தியாக தீவு எனப் பொருள் படும்படி ஷாஹித் தீவு என்று பெயர் மாற்றியது.
ஷாஹித்தீவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள்
· லக்ஷ்மன்பூர் பீச் மற்றும்
· பரத்பூர் பீச்.

சீதாப்பூர் பீச் என்று அழைக்கப்படும் இன்னொரு கடற்கரையும் இங்கு இருக்கிறது. ராமாயண கதாபாத்திரங்கள் பெயர் தாங்கி இருப்பதால் ராமாயண நிகழ்வுகளுடன் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என விசாரித்தால் யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் செல்லுலர் சிறைச்சாலை ஒலி ஒளிக்காட்சியில் அனுமான் இலங்கை செல்ல முதலில் அந்தமானையே தேர்வு செய்ததாகச் சித்தரிக்கப்படுகிறது. பின்னர் ராமர் தனுஷ்கோடியைத் தேர்வு செய்தாராம்.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் லக்ஷ்மன்பூர் பீச் ஒன்றிலிருந்தது. அங்கிருந்து நாங்கள் பரத்பூர் பீச் சென்றோம். பரத்பூர் பீச்சிலும் நீர் விளையாட்டுகள் காணப்படுகின்றன.
பரத்பூர் பீச்சில் அடர்ந்த மரங்களின் ஊடே நடந்து சென்று நீர் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும்.
நாங்கள் பாதுகாப்பாக அதி பராக்கிரம விளையாட்டுகள் தவிர்த்து கிளாஸ் பாட்டம் போட் எனப்படும் படகில் அமரும் இடத்தில் காலுக்குக் கீழே பதிக்கப்பட்ட கண்ணாடி கொண்ட படகில் சவாரி செய்தோம்.
இங்குக் கடல் நீர் தெள்ளத் தெளிவாகத் தெரிவதால் நாம் கண்ணாடி மூலம் கடலின் கீழே இருக்கும் பாறைகள், உயிருள்ள மூச்சு விடும் பவளப்பாறைகள் மற்றும் அழகழகான மீன்களைப் பார்க்க முடியும்.
படகோட்டி மூலம் நான் கற்றுக் கொண்ட இரு வகை மீன்களின் பெயர்கள் ஜீப்ரா மீன்கள் மற்றும் இரவு மீன்கள்.
ஜீப்ரா மீன்கள் தங்கள் உடம்பில் வரிக்குதிரை போல் வரிகள் கொண்டவை. இவை கடலில் படகுகள் வரும்பொழுது படகுகளின் அருகில் நெருங்கி வருமாம்.
இரண்டாவது வகை மீன்கள் இரவு மீன்கள் என்றழைக்கப்படும் நைட் ஃபிஷ். இவை இரவு நேரத்தில் ஒளி வீசும் உடல் வாகை கொண்டனவாம். தொட்டால் ஷாக் அடிக்குமா என்று தெரியவில்லை.
பரத்பூர் பீச் செல்லும் வழியில் கடல் உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் நிறைய இருக்கின்றன. லாப்ஸ்டெர், ஸ்க்விட் இங்குப் பிரசித்தம். விலையும் அதிகம். ஒரு நல்ல உணவகம் தேர்வு செய்து உணவு உண்பது பணப் பைக்கும் நல்லது, வயிற்றுக்கும் நல்லது.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ப்ரைவேட் பீச் இருந்தது. அங்கிருந்து நாங்கள் சூரிய அஸ்தமனம் பார்த்தோம்.
லக்ஷ்மன்பூர் தெளிவான வானத்துக்குப் பெயர் போனது. ஏனென்றால் இங்கு ஒளி மாசு குறைவு. நாம் இது நாள் வரை காற்று மாசு, ஒலி மாசு பற்றித் தான் கேள்விப்பட்டிருப்போம். இங்கு தான் நான் ஒளி மாசு (Light pollution) பற்றிக் கேள்விப்பட்டேன்.
லக்ஷ்மன்பூரில் நட்சத்திரங்களை டெலஸ்கோப் மூலம் பார்வையிட வசதிகள் அதிகம் உண்டு. நாங்கள் தங்கிய ஹோட்டலிலேயே இந்த வசதி இருந்ததால் அங்கேயே பைசா கட்டி நட்சத்திரங்கள் பார்வையிடப் பதிவு செய்து கொண்டோம்.
டெலஸ்கோப் மூலம் பெரிது படுத்தப்பட்ட நெபூளா விண்மீன் கூட்டம் முதலில் நட்சத்திரக்கூட்டங்கள் பற்றிய ஒரு முன்னுரை கொடுத்தனர். அவற்றில் நான் அறிந்திராத சில விஷயங்கள்.
· கிரகங்கள் இப்பொழுது எட்டு எண்ணிக்கையே கொண்டு இருக்கின்றன. ஒன்பது இல்லை. ப்ளூட்டோ என்ற கிரகம் ட்வார்ஃப் கிரகமாகக் கருதப்பட்டு கிரகங்களின் வரிசையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது.
· வீனஸ் கிரகம் மாலை நட்சத்திரம் என்றும் சில நேரங்களில் காலை நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
· நாய் நட்சத்திரம் ( Dog star ) என அழைக்கப்படும் சிரியஸ் நட்சத்திரம் பற்றி கிரேக்கப் புராணங்களில் ஒரு கதை இருக்கிறது.
· ஹாரி பாட்டர் கதையின் பல கதாபாத்திரங்கள் நட்சத்திரங்கள் பெயர் கொண்டே உள்ளன. வாயில் வராத பெயர்கள்.

· ஓரியன் விண்மீன் கூட்டங்களின் பின்னால் கிரேக்கப் புராணக்கதை இருக்கிறது. தன்னால் எந்த உயிரினத்தையும் கொல்ல முடியும் என்ற மமதையில் சுற்றி வந்திருக்கிறான் ஓரியன். அவனது வளர்ப்புச்செல்லங்களில் ஒன்று தான் சிரியஸ். ஓரியனின் அருகிலேயே சிரியஸ் நட்சத்திரக் கூட்டமும் காணப்படுகிறது. கடைசியில் ஸ்கார்ப்பியன் எனப்படும் விருச்சிகத்தால் ஓரியன் கொல்லப்படுகிறான்.
· நம்ம ஊர் சப்தரிஷிகளையும் பார்த்தோம். மேக மறைப்பால் மூன்று ரிஷிகளை மட்டும் பார்க்க முடிந்தது.சப்தரிஷிகளை கிரேக்கர்கள் செவன் சிஸ்டர்ஸ் என அழைக்கின்றார்கள்.
· சூரியனின் நடுவில் கறுப்பு புள்ளியுடன் பார்க்க முடிந்தது. அந்த கறுப்பு புள்ளிகள் தெரியும் இடங்கள்தான் சூரியனின் குளிர்ந்த பிரதேசங்களாம்.
· நெபூளா விண்மீன்கூட்டங்கள் பார்த்தோம்.
· நட்சத்திரத் தேன்கூடு பார்த்தோம். இந்த தேன் கூட்டில் நட்சத்திரங்கள் எண்ணற்ற எண்ணிக்கையில் இருக்கின்றன.
· நாம் இரவு நேரங்களில் தெளிந்த வானத்தில் செயற்கைக்கோள்களையும் பார்க்க முடியும். அவை வானில் நகர்ந்தவாறு இருக்கும். நட்சத்திரங்கள் போல் மின்னாது.
மேலும் நட்சத்திரங்கள் பற்றியும் வான் மண்டலம் பற்றியும் அறிய ஆர்வமுள்ளவர்கள் நம் ஊரில் ஆங்காங்கு இருக்கும் கோளரங்களை அணுகலாம்.

டெலஸ்கோப் மூலம் பார்க்கப்பட்ட நட்சத்திரத் தேன்கூடு கடைசியாக ஒரு சிறு அறிவுரை. நட்சத்திரங்கள் பார்வையிடும் பொழுது வெர்டிகோ தொந்தரவு உள்ளவர்கள் சற்று சிரமப்படுவீர்கள்.
நட்சத்திரக் கனவுகளுடன் படுத்து ஐந்தாம் நாளை முடித்துக் கொண்டோம்.
நாள் 6 – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுகள் (ரோஸ் தீவுகள்)
ஆறாம் நாளில் ஷாஹித் தீவுகள் விட்டு மீண்டும் ஷ்ரீ விஜயபுரம் வந்தோம்.
ரோஸ் தீவு கடல் சர்வேயர் டானியல் ரோஸ் பெயரால் அறியப்பட்டது. 2018இல் இந்திய அரசாங்கம் நேதாஜியைக் கௌரவிக்கும் விதமாக ரோஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனப் பெயர் மாற்றம் செய்தது.

ஷ்ரீ விஜயபுரத்தில் ஃபைபர் படகு பிடித்து ரோஸ் தீவுகள் வந்து சேர்ந்தோம். இந்த தீவில் இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த கட்டிடங்களின் எச்சங்கள் இன்னும் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சிதிலங்களின் எச்சங்கள் பெரிய, பெரிய மரங்களின் வேர்களால் சூழப்பட்டு நிற்கின்றன.
இது தவிர்த்து ரோஸ் தீவில் புள்ளி மான்கள், கூட்டம் கூட்டமாக ரொட்டி கொடுத்துப் பராமரிக்கப் படுகின்றன. இவை இந்தத் தீவில் ரொட்டி சாப்பிட்டும், சுற்றுப்பயணம் வரும் பயணிகள் கொடுக்கும் பொறி சாப்பிட்டும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன.
சில மயில்களையும் இங்கு நாம் பார்க்கலாம். திருச்சி லால்குடியில் இருந்து புலம் பெயர்ந்த அனுராதா ராவ் என்னும் ஒரு பெண் இந்த மான்களையும் மயில்களையும் பாதுகாத்து வருகிறார்.

அந்தமான் தீவுகளில் மான் மற்றும் மயில்கள் தவிர வேறு காட்டு மிருகங்களைப் பார்க்க முடியாது. மத்திய மற்றும் வடக்கு அந்தமானில் யானைகள் இருக்கின்றன. இந்த யானைகள் ஆங்கிலேயர் பெருத்த மரங்களை ஒரு இடம் விட்டு மறு இடம் நகர்த்த அந்தமான் கொண்டுவந்து பின் அடர்ந்த வனப்பகுதிகளில் அவற்றை விட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்.
வேறு சிலர் அந்த யானைக் கூட்டங்கள் வங்காள விரிகுடாக் கடலில் நீந்தி அந்தமான் அடைந்ததாகக் கருதுகின்றனர். இந்த நீச்சல் தியரி உடான்ஸ் தியரியாகவே கருதப்படுகிறது.
அந்தமானில் சதுப்புநிலங்கள் அதிகம் ஆதலால் முதலைகள் அதிகம். எனவே அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் மட்டும் நீந்தினால் நீங்கள் ஊர் திரும்பும் பொழுது முழுதாக திரும்பி வரலாம்.
ரோஸ் தீவுகளில் இன்றும் அன்றிலிருந்து பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு கலங்கரை விளக்கம் இருக்கிறது. அதன் அருகில் ஒரு மாலுமி அந்த கலங்கரை விளக்கத்தைக் கண்காணித்து வருவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த கலங்கரை விளக்கம் போகும் வழியில் ஒரு நங்கூரம் வடிவமைக்கப்பட்டு, ’தனி மாலுமி எப்பொழுதும் கண்காணிக்கும் இடம்’ என்ற பொருள் படும்படி ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோஸ் தீவு என்று முன்னாளில் அழைக்கப்பட்டு இப்பொழுது நேதாஜி பெயரால் அழைக்கப்படும் தீவில் நடந்தும் செல்லலாம். சுற்றி வர பாட்டரி கார்களும் கிடைக்கின்றன.
நேதாஜி சுபாஷ் தீவு பார்த்து ஷ்ரீ விஜயபுரம் மீண்டும் அடைந்தோம். இரவு உணவுக்குப் பின் விமானம் பிடித்து சென்னை கிளம்பினோம்.
அந்தமான் பற்றி இவ்வளவு கூறிவிட்டு அந்தமானுடன் தொங்கி நிற்கும் நிக்கோபார் தீவுகள் பற்றி சொல்லாமல் இருந்தால் இந்தப் பயணக்கட்டுரை நிறைவு பெறாது.
நிக்கோபார் தீவுகளும் அந்தமான் தீவுகளும் ஒரே நிர்வாகத்தில் வந்தாலும் நிக்கோபார் தீவுகள் அனுமதி மறுக்கப்பட்ட இந்திய ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி.
நிக்கோபார் தீவுகள் செல்ல அங்கு வசிப்பவரின் ஸ்பான்சர்ஷிப் கட்டாயம் தேவை. மேலும் தகுந்த அரசாங்க அனுமதியும் தேவை.
ஆக அந்தமானில் நாங்கள் தங்கியிருந்த ஆறு நாட்களும் ஆறு வித்தியாச அனுபவங்கள்.
இந்தியாவிற்குள் நல்ல ஒரு சுற்றுப்பயணம் செல்ல விரும்புவோர் அந்தமான் தீவுகள் கட்டாயம் ஒருமுறை சென்று வர வேண்டும்.
பயணம் நிறைவுற்றது
அன்புடன்
எஃப்.எம்.போனோ.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.