மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலா...
TVK : `எம்.ஜி.ஆர் ஃபார்முலாவைப் பின்பற்றாத விஜய்?' - இடைத்தேர்தல் புறக்கணிப்பும் பின்னணியும்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளில் தமிழக வெற்றிக் கழகமும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை விட்டிருக்கிறார். இதன்மூலம் ஏற்கெனவே இடைத்தேர்தலை புறக்கணித்திருக்கும் அதிமுக, தேமுதிக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரிசையில் த.வெ.கவும் இணைந்திருக்கிறது.
த.வெ.க வின் இடைத்தேர்தல் புறக்கணிப்பின் பின்னணி என்ன? இந்த புறக்கணிப்பு முடிவு அவர்களுக்கு சாதகமானதாக அமையுமா?
கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பிப்பதாக வெளியிட்ட அறிக்கையிலேயே, 'வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு.' என குறிப்பிட்டிருந்தார். இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் இதை மேற்கோள்காட்டியிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்திருந்தார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்திருந்தனர். நேரடியாக 2026 தேர்தலை முதல் தேர்தல் களமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாக இருக்கிறது. விஜய்யின் இந்த முடிவுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் தமிழக அரசியலிலேயே சில உதாரண சம்பவங்கள் இருக்கின்றன.
விஜய் எம்.ஜி.ஆர் யைத்தான் தனக்கான முன்னோடியாக கொண்டிருக்கிறார். 'அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்.' என இன்றைக்கு எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு பூரித்துப் போய் பதிவையும் வெளியிட்டிருக்கிறார். ஒரு நடிகரால் நாடாளவும் முடியும் என்கிற கூற்றுக்கு வலுசேர்க்க எம்.ஜி.ஆரைக் குறிப்படும் விஜய் அவரின் அரசியல் பயணத்தின் தொடக்கத்தைப் பற்றியும் அறிந்திருப்பார்.
இடைத்தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆர்
1973 இல் அதிமுக எனும் கட்சி ஆரம்பிக்கப்பட்ட 6 மாதத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் தயங்கவில்லை. அதிமுக சார்பில் மாயத்தேவரை வேட்பாளராக நிறுத்தினார். சுயேட்சைகளுக்கு வழங்குவது போல அதிமுகவுக்கும் சில சின்னங்களை கொடுத்து தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். அதில் எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில் மாய்த்தேவர் தேர்ந்தெடுத்த சின்னம்தான் இரட்டை இலை. ஆட்சியிலிருந்த திமுக எம்.ஜி.ஆருக்கு எதிராக கடுமையாக பிரசாரம் செய்தது. அவரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு குடைச்சல் கொடுக்கப்பட்டது. முடிவில் வாக்குப்பதிவு நடந்தது. 2.6 லட்சம் வாக்குகளைப் பெற்று அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் பெரு வெற்றிப் பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாமிடம் பிடித்தது. திமுக சார்பில் போட்டியிட்ட பொன் முத்துராமலிங்கம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். திண்டுக்கல் இடைத்தேர்தல் கொடுத்த தெம்போடு 1974 இல் கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் அதிமுகவை இறக்கி வென்றார் எம்.ஜி.ஆர்.
ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர்:
இதன் தொடர்ச்சியாகத்தான் 1977 இல் திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கிறார்.
திமுக எதிரான அரசியல் சக்தி அதிமுகதான் என்பதை இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் நிறுவிக்கொண்டே இருந்தார். மேலும், ஆட்சியிலேயே இருந்தாலும் தன்னால் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற பிம்பத்தை உருவாக்கினார். இதன்மூலம், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நேர்மறையான கருத்தாக்கத்தை உண்டாக்கினார்.
எம்.ஜி.ஆரை முன்னோடியாக கருதும் விஜய், தேர்தலில் எம்.ஜி.ஆரின் பாணியை பின்பற்றுவதை தொடர்ந்து தவிர்த்தே வருகிறார். இத்தனைக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவை எதிர்த்து நாம் தமிழரை தவிர பெரிய கட்சிகள் எதுவும் களத்தில் இல்லை. விஜய்யும் திமுக எதிர்ப்பை முன்வைக்கும் விஜய், ஈரோடு கிழக்கில் திமுகவோடு நேரடியாக போட்டி போட்டு திமுகவுக்கு எதிரி தவெகதான் என்பதை வலுவாக நிறுவயிருக்க முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் அந்த வாய்ப்பை விஜய் இழப்பதாகக் கூறுகின்றனர்.
இதெல்லாம் போக தவெக கட்சிக்கான நிர்வாகிகள் நியமன வேலையே இப்போதுதான் போய்க்கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் நியமனத்தையே முடிக்காமல் தேர்தலை எதிர்கொள்வது சரியாக இருக்காது என்றும் விஜய் தரப்பு நினைத்திருக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இடைத்தேர்தலில் பணம்தான்!
இதைப்பற்றியெல்லாம் தவெகவின் செய்தித் தொடர்பாளர் ஜெகதீஸ்வரனிடம் பேசினேன், ''இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எந்தத் தேர்தலிலுமே போட்டியிடாமல் எங்களின் முதல் தேர்தலாகவே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுதான் எங்களின் இலக்கு. அதனால் ஈரோடு கிழக்குத் தேர்தலை புறக்கணித்திருக்கிறோம். திமுகவுடன் நீங்கள் நேரடியாக மோத முடியுமே என்கிற உங்களின் வாதம் சரிதான். ஆனால், இடைத்தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். கடந்த முறை இதே ஈரோடு கிழக்கில் 'பட்டி பார்முலா' வைத்து திமுக வென்றிருக்கிறதே. இடைத்தேர்தலில் பணம்தான் வெற்றியை தீர்மானிக்கிறது. ஆர்.கே.நகரை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே திமுக வாக்காளர்கள் கூட தினகரனுக்குதான் வாக்களித்தார்கள். காரணம் என்னவென்று நமக்கு தெரியும்.
ஈரோடு கிழக்கில் த.வெ.க இறங்கினால் 100 கோடி செலவளிக்கும் இடத்தில் 200 கோடியை செலவளிக்கக்கூட திமுக ரெடியாக இருக்கும். இப்படியொரு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை.' என்றவரிடம் கட்சியின் கட்டமைப்புப் பணிகள் குறித்துக் கேட்டேன், அதற்கு, 'நிர்வாகிகள் நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. வருகிற வாரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளை தலைவர் நேரில் சந்தித்தும் பேசவிருக்கிறார். தலைவருமே 19 அல்லது 20 இந்த இரண்டு நாட்களில் ஒன்றில் பரந்தூருக்கு சென்று அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவிருக்கிறார். அதற்காக காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்டு மனு அளித்திருக்கிறோம். இன்றைக்குள் காவல்துறையிடமிருந்து பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.' என்றார்.
விஜய்யின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.