97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா...
TVK : 'பனையூரில் திடீர் மீட்டிங்; முதற்கட்ட மா.செ அறிவிப்பு?' - நிர்வாகிகளைச் சந்திக்கிறாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகமான பனையூரில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கட்சியின் தலைவரான விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது
சென்னை உட்பட குறிப்பிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு பனையூர் அலுவலகத்திலிருந்து திடீர் அழைப்பு சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று காலை 10 மணி முதல் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில்தான் கட்சியின் தலைவரான விஜய்யும் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியே கட்சி தொடங்கப்பட்டிருந்தாலும் கட்சிக்கென நிர்வாகிகளை அறிவிக்காமல் இருந்தார்கள். மக்கள் இயக்கமாக இருந்த போது எந்தெந்த நிர்வாகிகள் இருந்தார்களோ அவர்களையே கட்சிப் பொறுப்பிலும் வைத்திருந்தார்கள். இப்போது கட்சிக்கென புதிதாக நிர்வாகிகளை தேர்வு செய்யும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 10 ஆம் தேதி இதுசம்பந்தமாக தமிழகம் முழுவதுமுள்ள அத்தனை மாவட்டப் பொறுப்பாளர்களையும் அணித்தலைவர்களையும் ஆனந்த் நேரில் சந்தித்து, இரண்டு நாட்களுக்கு தொடர் மீட்டிங்கை நடத்தியிருந்தார். புதிய மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை அந்த மீட்டிங்கில் நடந்திருக்கிறது. விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மா.செ பதவிக்கான பரிசீலனையில் இருக்கு நிர்வாகிகளின் முழு விவரமும் எழுதி வாங்கப்பட்டிருக்கிறது.
மக்கள் இயக்கமாக இருக்கும்போது நீங்கள் செய்த 5 நற்பணிகள், கட்சி ஆரம்பித்த இந்த ஒரு வருடத்தில் நீங்கள் செய்த 5 நற்பணிகள் என்னென்ன போன்ற கேள்விகள் அதில் முக்கியமாக இடம்பெற்றிருக்கிறது. கோஷ்டி மோதல் மற்றும் உள்ளடி வேலைகளால் சில மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமிப்பதில் கொஞ்சம் சிக்கலும் இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் ஆனந்த் அன்றே உட்காந்து பேசி முடித்திருக்கிறார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சி ஆரம்பித்து முதலாண்டு நிறைவு பெறுகிறது. அதற்குள் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என விஜய் விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிர்வாகிகளை குழு குழுவாக சந்தித்து பேச விஜய் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
முதற்கட்டமாக வட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை விஜய் இன்று சந்திக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் ஒரு மா.செ குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். நிர்வாகிகளுக்கு மீட்டிங் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதே தவிர விஜய் அவர்களை சந்திப்பாரா இல்லையா என்கிற செய்தி இன்னும் தெளிவாக சொல்லப்படவில்லை.
ஒவ்வொரு 2 அல்லது 3 தொகுதியை உள்ளடக்கி ஒரு மாவட்டமாக உருவாக்கி கிட்டத்தட்ட 100 மா.செக்களை அறிவிக்க திட்டமிட்டிருந்தார்கள். நிர்வாகிகள் நியமனத்தில் கொஞ்சம் இழுபறி இருப்பதால் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக 55 மா.செக்களை மட்டும் அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் சொல்கிறார்கள் தவெக வட்டாரத்தினர்.