அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?
TVK: "விஜய்க்குக் கூடிய கூட்டத்தைவிட நடிகர் அஜித்துக்கு இரண்டு மடங்கு கூடும்" - ராஜேந்திர பாலாஜி
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தொடர்ந்து மாநாடு, அறிக்கைகள் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை `உங்க விஜய் நா வரேன்' என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.
செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியும், 20-ம் தேதி நாகப்பட்டினத்திற்கும் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் செல்லும் இடங்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

அதனால், சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றன. அதே நேரம், கூட்டம் ஓட்டாக மாறாது என்பது விஜய்க்கு இன்னும் புரியவில்லை என அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு திரையுலகிலிருந்து மக்களின் பெரும் ஆதரவுடன் அரசியலுக்கு வந்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.
அவர் தே.மு.தி.க தொடங்கும்போது, அவருக்காக மதுரையில் கூடிய கூட்டம் மிகப் பெரியது. அவருக்குப் பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள்.
விஜய்க்கும் கூட்டம் வருகிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், விஜய்யின் தொண்டர்கள் பக்குவப்பட்டவர்கள் அல்ல. அதனால், அந்தக் கூட்டம் ஓட்டாக மாறுமா என்றால் வாய்ப்பில்லை.
களத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்து, தேர்தல் வியூகத்தைச் செயல்படுத்தும் அளவு விஜய்யின் ரசிகர்களுக்கு இன்னும் பக்குவம் வேண்டும். அப்போதுதான் இந்தக் கூட்டம் ஓட்டாக மாறும்.
திரைப்பட நடிகர் அஜித் குமார் இப்போது வெளியே வந்தால், விஜய்க்குக் கூடிய கூட்டத்தைவிட இரண்டு மடங்கு கூடும்.
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே வெளியே வந்தால் அவருக்கு இல்லாத கூட்டமா... இன்னும் அவருக்கு அந்த மாஸ் இருக்கு.
திரையில் பார்த்தவர்களை நேரில் பார்க்கும் அனுபவத்துக்காக கூட்டம் வரும்.
இதை நம்பி தனித்து நின்று களம் காணும் எண்ணமிருந்தால், விஜய்யின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். அவரின் வெற்றி எந்தக் காலத்திலும் நடக்காது.
அவர் உண்மையிலேயே தி.மு.க-வை எதிர்க்கிறார் என்றால், 'தி.மு.க ஆட்சியைத் தூக்கி எறிவேன்' என அவர் சொல்வதும் உண்மையென்றால், விஜய் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு வந்தாக வேண்டும்.
அப்படி அவர் வரவில்லை என்றால், இந்தத் தேர்தலுடன் தி.மு.க விஜய்யின் அரசியல் வாழ்க்கையை முடித்துவிடும்.
எனவே, விஜய் நன்கு யோசித்து அ.தி.மு.க கூட்டணிக்குத்தான் வரவேண்டும். இதுதான் அவருக்கான சரியான ஆலோசனை, சரியான முடிவு. அவர் தனித்து களம் காண்பது தி.மு.க-வுக்கு வலுசேர்க்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.