Union Budget 2025: `ஏமாற்றம் டு ஊக்கம்!' - மத்திய பட்ஜெட் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து
நேற்று தனது 8-வது பட்ஜெட்டை வெற்றிகரமாகத் தாக்கல் செய்து முடித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தப் பட்ஜெட்டில் விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வருமான வரி என ஏகப்பட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நிபுணர்களின் கருத்துகளை கேட்டோம்.
பட்ஜெட்டில் வெளியாகியுள்ள விவசாயத் திட்டங்கள் குறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் பேசுகிறார்...
"விவசாயிகள் எதிர்பார்த்த எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்தப் பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அதுகுறித்து எதுவுமே பேசப்படவில்லை.
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. ஏற்கெனவே 'விவசாயிகளுக்கு எதிரான அரசு' எனப் பெயர் பெற்றுவிட்டது. அதனால், விவசாயிகளுக்கு சாதகமான பல அறிவிப்புகள் வரும் என்று நினைத்தோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பெரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் இந்த அரசு, விவசாயி கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து துளியும் யோசிக்கவில்லை.
கிசான் கிரெடிட் கார்டு குறித்துக் கூறியுள்ளார்கள். பெரும்பாலான விவசாயிகளுக்கு இதை பெறுவதற்கான தகுதியே இல்லை... முக்கியமாக, அவர்களுக்கு கிரெடிட் கார்டு என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியிருக்கையில், இந்த அறிவிப்பு எப்படி அவர்களை சென்று சேரும்... அவர்களுக்குப் பலனளிக்கும்.
பெருமளவு அதிகரித்துள்ள ரசாயன உரங்களின் விலையில் மானியம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயத்தில் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். வேளான் வணிக துறையை தனியார் மயமாக மாற்ற முயற்சிகள் நடந்துவருகின்றன. இதைத் தடுக்கவேண்டும்".
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து MSME நிபுணர் ஆனந்த் கூறியாதாவது...
"இந்தப் பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பாசிட்டிவ் ஊக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நம்பலாம். இதில் மைக்ரோ தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கதக்க விஷயம்.
இந்தத் தொழிலாளர்களுக்கு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலைவிட, நிதி பெரிய பிரச்னை. இப்போது இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிதித் திட்டங்கள் அந்தத் தொழிலாளர்களுக்கு பெரிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும்".
பட்ஜெட்டில் இடம்பெற்ற பிசினஸ் குறித்த அம்சங்கள் குறித்து விளக்குகிறார் தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய்...
"இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 45 சதவிகிதமும், உற்பத்தியில் சுமார் 36 சதவிகிதமும் சிறு, குறு, நடுத்தர துறைகள் பங்களிக்கின்றன என்று பட்ஜெட்டில் மத்திய அமைச்சரே குறிப்பிட்டுள்ளார். மைக்ரோ நிறுவனங்களுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் உத்தரவாதக் காப்பீடு ₹5 கோடியிலிருந்து ₹10 கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இப்படி இந்தத் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த அத்தனை அறிவிப்புகளும் இந்தத் துறையை சேர்ந்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் இந்தத் துறையினரை மேலும் ஊக்குவிக்கும்".
பெண்கள் குறித்த அறிவிப்புகள் பற்றியும், வேலைவாய்ப்புகளை பற்றியும் பேசிகிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்...
டேர்ம் கடன் திட்டம், ஊட்டச்சத்து திட்டம் என்பதை தாண்டி இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு என பெரிதாக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இன்றைய பொருளாதாரத்திற்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது மிக மிக தேவை. இப்போது நடுத்தர மக்களுக்கு வருமான வரிச் சலுகையுடன், வேலைவாய்ப்பு உருவாக்கமும் தேவை. ஆனால், அது சம்பந்தமாக எதுவும் கூறப்படவில்லை.
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகளும், அறிவிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அது சரியானது தான். ஆனால், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் அல்லது சேவையை நுகர்வதற்கான தேவையை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் இந்தச் சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் பலனடையும்.
பட்ஜெட்டில் மிகப்பெரிய நல்ல விஷயம் என்றால் அது கிக் தொழிலாளர்களுக்கான அங்கீகாரம். இதன் மூலம் அவர்களுக்கு 60 வயதிற்கு பிறகு பென்சன் கிடைக்கும். ஆனால், அதுப்பற்றிய தெளிவுகள் இல்லை. இந்தத் திட்டத்தின் படி, கிக் தொழிலாளர்கள் e-shram வலைதளத்தில் பதிவு செய்து, அதன் நன்மைகளை பெறலாம்.
கல்வி குறித்த திட்டங்கள் பற்றி கூறுகிறார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி.
"கல்வித்துறைக்கு மிகப்பெரிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் தான். எப்போதும் போன்ற பட்ஜெட்டாகவே இந்தப் பட்ஜெட்டும் கல்விக்கு அமைந்துவிட்டது.
இந்தத் தடவை புதியதாக ஐ.ஐ.டி சீட்டுகளும், மருத்துவ சீட்டுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரூ.500 கோடி செலவில் ஏ.ஐ சம்பந்தமான நிறுவனம் நிறுவப்படப்போகிறது. ஆனால், ஏற்கெனவே இந்தியா இந்தத் துறையில் பின்தங்கியதுள்ளது. அதனால், இந்தத் துறைக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 - 1,500 கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'இப்படியாவது தொடங்கியிருக்கிறது' என்று இப்போதைக்கு ஆறுதல் அடைந்துகொள்ளலாம்.
படிப்பு என வந்துவிட்டால், ஏற்கெனவே உள்ள திட்டங்கள் தான் மேம்படுத்தப்பட்டுள்ளது. வருமான வரி சலுகை உச்ச வரம்பை ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டிருக்கும்போது, அடமானம் இல்லாத கல்விக்கடன் அளவு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக செய்திருக்கலாம். கல்விக்கடனின் வட்டி வரம்பை குறைத்திருக்கலாம். பெண் குழந்தைகளின் படிப்பு, அரசு பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றை மேம்படுத்த திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
மேலும், புதிய கல்வி நிலையங்கள் அல்லாமல் ஏற்கனவே இருக்கும் கல்வி நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகியிருக்கலாம்".
எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய லித்தியம் பேட்டரிகளின் வரி சலுகைகள் குறித்து சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்.
"மத்திய அரசு மின்சார வாகன பேட்டரி உற்பத்திக்கு தேவையான கோபால்ட், லித்தியம்-இரும்பு பேட்டரி கழிவுகள், ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட 12 முக்கிய கனிமங்களின் அடிப்படை சுங்க வரியை (BCD) நீக்கியுள்ளது. இந்த பொருட்கள் பேட்டரிகள், செமி கண்டக்டர் (semiconductors) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உபகரண உற்பத்திக்கு அத்தியாவசியமானவை. இந்த வரிச் சலுகை தூய்மையான ஆற்றல் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான செலவுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும், மின்சார வாகன பேட்டரி உற்பத்திக்கு தேவையான 35 பொருட்களும், மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கு தேவையான 28 பொருட்களும் சுங்க வரி விலக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிறுவனங்கள் பேட்டரி உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கூடுதல் வரி செலுத்தாமல் இறக்குமதி செய்ய முடியும். இந்த அறிவிப்பு வெறும் உள்நாட்டு மின்சார வாகனங்களின் உற்பத்தியை மட்டும் ஊக்குவிக்காமல், வெளிநாடுகளில் இருந்து பேட்டரிகளை இறக்குமதி செய்வதையும் குறைக்கும்.
இதனால், இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிவிப்பு அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் கணிசமாக உயரும். ஆக, இது பாராட்டதக்க மற்றும் வரவேற்கதக்க அறிவிப்பு ஆகும்".
இந்த பட்ஜெட்டில் உங்களது எதிர்பார்ப்பு நிறைவேறும் விதமான அறிவிப்பு வந்ததா? என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்