Upendra: மொபைலை ஹேக் செய்த மர்ம நபர்கள்; இன்ஸ்டா வீடியோவில் மக்களை எச்சரித்த உபேந்திரா - நடந்ததென்ன?
பிரபல கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்கா சைபர் குற்றவாளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர். இருவரது மொபைல் போனையும் ஹேக் செய்துள்ள மர்ம நபர்கள் அவர்களிடம் 22,000 ரூபாய் கேட்டு மெஸ்ஸேஜ் செய்துள்ளனர். அத்துடன் சில மணிநேரங்களில் அந்த பணத்தைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்றும் கூறியிருக்கின்றனர் என்கிறது என்.டி.டி.வி தளம்.

Upendra மனைவிக்கு வந்த மெஸ்ஸேஜ்!
முதல்முறையாக பிரியங்கா உபேந்திராவுக்கு வந்த மெஸ்ஸேஜ் மூலம் இந்த பிரச்னை தொடங்கியிருக்கிறது. அதில் உங்கள் ஆர்டரை டெலிவரி செய்ய முடியவில்லை என்றும், அதனால் ஒரு எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் கூறப்பட்டிருக்கிறது.
எண்களுடன் சின்னங்களும் இடம் பெற்றிருந்த அந்த எண்ணை இருவரும் தொடர்புகொண்டுள்ளனர். இருவரின் மொபைலும் ஹேக் செய்யப்பட்டுவிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த உபேந்திரா, தனது சமூக வலைத்தளத்தில் லைவ் சென்று, மக்கள் இதுபோன்ற ஏமாற்று மெஸ்ஸேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
Upendra என்ன பேசினார்?
லைவில் பேசியவர், "பிரியங்காவின் ஃபோனுக்கு ஒரு மெஸ்ஸேஜ் வந்தது... நாங்கள் அந்த எண்ணுக்கு அவரது மொபைலில் இருந்து கால் செய்தோம். பின்னர் என் மொபைலில் இருந்து செய்தோம். இப்போது இரண்டும் ஹேக் செய்யப்பட்டுவிட்டது." என்றார்.
மற்றொரு பதிவில் அவரது மனைவி, "என்னுடைய போனும் அவரது போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சிலர் UPI வழியாக பணம் கேட்கின்றனர். எங்கள் போனிலிருந்து பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம். அது நாங்கள் அல்ல." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நட்சத்திர ஜோடி காவல்துறையில் வழக்கமான புகாரை அளித்துள்ளனர்.
உபேந்திரா கடைசியாக ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக RAPO22 / Andhra King Taluka, 45 ஆகிய படங்கள் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.