US Market Crash: 4 டிரில்லியன் டாலரை இழந்த அமெரிக்க பங்குச் சந்தை... பிற நாடுகளை பாதிக்குமா?!
''தன் வினை தன்னை சுடும்' என்ற பழமொழி தற்போது அமெரிக்காவிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் மிகவும் பொருந்தும்.
'அமெரிக்காவை வஞ்சிக்கிறார்கள்' என்ற தொனியில், ஒவ்வொரு நாட்டின் மீதும் அதிக வரிகளை விதித்து வந்தார் ட்ரம்ப். இப்படி தன் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பிற நாடுகளின் மீதான வரி விதிப்பை அதிகரிப்பது, அதிக வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்க சட்டங்களை கடுமையாக்குவது, பிற நாட்டினருக்கு அமெரிக்க குடியுரிமை வேண்டுமானால் முன்பு இருந்ததை விட அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று கொண்டுவந்தது என இவை அத்தனையும் அந்தர் பல்டி அடித்து அமெரிக்காவையே திரும்ப தாக்கியுள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும், அமெரிக்கா பங்குச்சந்தையில் கிட்டதட்ட 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. காரணம், ட்ரம்ப்பின் சட்டம் மற்றும் கொள்கைகளால் பொருளாதாரத்தில் எதாவது மாற்றம் ஏற்படுமோ, பங்குச்சந்தை மதிப்பு வீழுமோ என்ற பயத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பது அதிகரித்திருக்கிறது. இந்த 4 டிரில்லியன் டாலர் பங்கு விற்பனையில் நேற்று மிக அதிகமாக பங்குகள் விற்கப்பட்டு உள்ளன.
'அமெரிக்காவில் தானே பங்குச்சந்தை வீழ்ச்சி' என்று இங்கு நாம் இருந்துவிட முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் பிற நாடுகளையும் தாக்கும்.
1. பங்குச்சந்தை வீழும் போது, தங்கம் விலை அதிகரிப்பது வழக்கம்.
2. உலகம் எங்கிலும் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் அமெரிக்காவிற்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த இரண்டு ஒன்று சேரும்போது, தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரிக்கலாம்.
பங்குச்சந்தை வீழ்ச்சி நிச்சயம் பொருளாதாரத்தை தாக்கும். இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம். ஆக, அமெரிக்காவில் இருந்து பிறநாடுகளில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை தானாக உயரும். அமெரிக்காவை நம்பி இருக்கும் நாடுகளை இது பெரிதும் பாதிக்கும். மேலும், இந்தப் பாதிப்பு நம் நாட்டு பங்குச்சந்தையிலும் எட்டிப்பார்க்கும்.
ஒருவேளை, இந்தத் தருணத்தில் உஷாராகி ட்ரம்ப் தனது சட்ட திட்டங்களையும், கொள்கைகளையும் தளர்த்தினால் பிற நாட்டின் மீதான வரி விதிப்பு குறையும். தங்கம் விலை குறையும். எந்த நாட்டின் பொருளாதாரமும் அமெரிக்காவால் பாதிப்படையாது.
ஆனால் ட்ரம்ப், 'இந்த சட்டத்தையே தொடரப்போகிறாரா அல்லது தளர்த்தப்போகிறாரா?' என்பதைப் பொறுத்து தான் அனைத்தும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
