Share Market: இந்த 5 காரணத்தினால் பங்குச்சந்தை 'இந்த' மாதம் சரியாகிவிடும் - நிபுணர் விளக்கம்
பங்குச்சந்தை சில மாதங்களாகவே இறங்குமுகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. 'இது சரியாகுமா... எப்போது சரியாகும்... முதலீடு செய்த காசு என்ன ஆகும்... இனியும் முதலீடு செய்யலாமா? ' என்ற பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தக் குழப்பங்களுக்கு 'பயமே வேண்டாம்... எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும்' என்று பாசிட்டிவ் பதிலளிக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம்.
"பங்குச்சந்தை சில மாதங்களாகவே இறங்குமுகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. 'இது சரியாகுமா... எப்போது சரியாகும்... முதலீடு செய்த காசு என்ன ஆகும்... இனியும் முதலீடு செய்யலாமா? ' என்ற பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தக் குழப்பங்களுக்கு 'பயமே வேண்டாம்... எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும்' என்று பாசிட்டிவ் பதிலளிக்கிறார் Equinomics Research நிறுவனர் மற்றும் பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம்.

"பங்குச்சந்தை தற்போது இறங்குமுகத்தில் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட தேவையில்லை. இது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடக்கும் வழக்கமான ஒன்று தான்.
ஆம்... இது சந்தையில் வழக்கமாக நடக்கும் கரெக்ஷன் காலக்கட்டம் இது. ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளை எடுத்துக்கொண்டால் நிறைய பங்குகள் 80 P/E, 100 P/E, 110 P/E... இன்னும் சில 900 P/E கூட சென்றது. இதற்கு காரணம் 'ஓவர் வேல்யூவேஷன்'.
புதிதாக ஐ.பி.ஓ லிஸ்டாகிய சில நிறுவனங்கள், டிஜிட்டல் மற்றும் ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி உருவான நிறுவனங்களின் மதிப்பு அபரிமிதமாக சென்றது. ஆனால், அதுவே புராபிட் புக்கிங்காக மாறும்போது அதற்கான லிக்விடிட்டி சந்தையில் இல்லை. இது தான் சந்தையின் சரிவிற்கு காரணம்.
இதுமட்டுமல்லாமல், பங்குச்சந்தையின் இறங்குமுகத்திற்கு முக்கிய 4 காரணங்கள் உண்டு.
1. ட்ரம்ப்: ட்ரம்ப் வந்தப்பிறகு தான் பங்குச்சந்தை இறங்கியது என்று பரவலான பேச்சு இருந்து வருகிறது. ஆனால், அது உண்மை அல்ல. செப்டம்பர் மாதம் முதலே சந்தை சரிவடையத் தொடங்கிவிட்டது. ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், அடுத்தடுத்து அவர் எடுக்கும் முடிவுகளாலும் உலகளாவிய சந்தையில் பாதிப்பு தொடர்ந்தது. அந்தப் பாதிப்பு இந்திய சந்தையிலும் பிரதிபலிக்கிறது.
2. ஜி.டி.பி: இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டை விட, இரண்டாவது காலாண்டில் குறைந்து வந்தது.

3. கார்ப்பரேட் வருமானம்: கடந்த ஆண்டு பாதியில் இருந்து கார்ப்பரேட் வருமானம் குறைந்தது. சொல்லப்போனல், அதன் வருமானம் ஒற்றை இலக்கத்தில் வந்தது.
4. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்திய சந்தையில் இருந்து வெளியில் எடுத்தனர்.
பங்குச்சந்தையில் இறங்குமுகம் நீண்ட காலத்திற்கு தொடரும் என்பதையெல்லாம் நம்ப வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கட்டமைப்பு மாற்றங்கள் நடந்துள்ளது. முன்பை விட, இப்போது டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைவரும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்கிறார்கள். அதனால், அந்த செய்திகளுக்கு ஏற்ற மாதிரி தங்களது முதலீடுகளை மாற்றியமைக்கின்றனர்.
பலவீனம்... பாதிப்பு...
ஒருவர் மாற்றியமைக்கும்போது சந்தையில் பெரியளவில் மாறுபாடு ஏற்படாது. இதுவே செய்திகளைத் தெரிந்துகொண்டு பெரும்பாலானவர்கள் இப்படி மாற்றும்போது பெரிய அளவிலான மாற்றம் அதாவது ஏறுமுகமோ, இறங்குமுகமோ சந்தையை எட்டிப்பார்க்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மார்க்கெட் கேப் 484 லட்சம் கோடியாக இருந்தது. அதன்பிறகு ஐ.பி.ஓ ஸ்விக்கி, ஹூண்டாய் மூலம் 3 லட்சம் கோடியை மார்க்கெட் கேப்பில் சேர்த்தது. இது மிகப்பெரிய உச்சமாக இருந்தது. ஆனால், தற்போது மார்க்கெட் கேப்பின் மதிப்பு 397 லட்சம் கோடி. கிட்டதட்ட 90 லட்சம் கோடி சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த மாதிரியான நஷ்டம் மார்க்கெட்டை பலவீனமாக்கும்... லிக்விடிட்டியை பாதிக்கும்.

மீளும்...
'இது தொடருமா?' என்று கேட்டால், 'இல்லை' தான். இந்த வீழ்ச்சி மார்ச் பாதி வரை தொடரும். அதன் பிறகு, மார்ச் கடைசியில் சந்தை நிலைப்பெற்று, ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டு, ஏறுமுகத்தை நோக்கி நகரும் என்பது என் கருத்து.
முன்பெல்லாம் சந்தை இப்படி வீழ்ச்சியடைய 1 - 2 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை. 2014-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒட்டுமொத்த சந்தை மதிப்பே கிட்டதட்ட ரூ.84 லட்சம் கோடி தான். ஆனால், இப்போது நஷ்டமே ரூ.90 லட்சம் கோடி. இது முதலீட்டாளர்களின் முடிவுகளின் வேகத்தையும், அதன் விளைவையும் காட்டுகிறது.
எப்படி சந்தை மதிப்பு ஓரயடியாக குறைந்ததோ, அது மீளத் தொடங்கும்போது அனைவரும் முதலீடு செய்து சீக்கிரம் ஏறுமுகத்தில் சந்தை வேகம் பெறும்.
5 காரணங்கள்
1. இப்போது பங்குகளின் விலை குறைந்துள்ளது.
2. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ரேட்டிங் ஏஜென்சி 'அடுத்த காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி நன்றாக இருக்கும்' என்று கூறியுள்ளது.
3. ட்ரம்ப்பின் முடிவுகள் தொடர்ந்து பங்குச்சந்தையை பாதிக்கும் என்று கொள்ள வேண்டாம். ஆரம்பத்தில், அவரது முடிவுகள் உலகளவில் பாதிப்பில் ஏற்படுத்தினாலும் போகப் போக அந்த முடிவுகள் அமெரிக்காவிற்கு எதிராகவே தொடரும். இதனால், அவர்களின் பொருளாதாரம் பாதிப்படையும்.
4. இந்த ஆண்டு பருவநிலை நன்றாக இருக்கும் என்று கொரியன் ஏஜென்சி கூறியுள்ளது.
5. என்ன தான் பங்குச்சந்தை இறங்குமுகத்தில் இருந்தாலும் இந்திய பங்குச்சந்தைக்குள் வாரத்திற்கு 6 - 8 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் வந்துகொண்டே உள்ளனர்.
- இவை சந்தையை சீக்கிரம் மீட்டெடுக்கும்.

ரிக்கவரி வரும்போது ஸ்மால் மற்றும் மிட் கேப் நல்ல மதிப்பைப் பெறும். புது முதலீட்டாளர்கள் இதை நோக்கியே நகர்கின்றனர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப்பை தான் விற்று வருகின்றனர். அதனால், ஏப்ரலுக்கு பிறகு ஸ்மால் மற்றும் மிட் கேப் ஏறுமுகத்தில் செல்லும்.
ஆனால், மக்கள் எதில் முதலீடு செய்வதற்கு முன்பும் பங்கின் உண்மையான மதிப்பு, நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் ஆகியவற்றை கவனமாக பார்த்து முதலீடு செய்ய வேண்டும். இதை செய்தாலே 2026 நிதியாண்டில் சிறந்த லாபத்தை பெற முடியும். ஹேப்பி இன்வெஸ்ட்டிங்" என்று விளக்கினார்.