முறையாக அமைக்கப்படாத ஜீயபுரம்-குடமுருட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையிலான சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருச்சி-கரூா் நெடுஞ்சாலை முதலில் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு, பின்னா் 10.5 மீட்டராக அகலப்படுத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் காவிரி, வாய்க்கால்கள் செல்வதால் ஆங்காங்கே குறுகலாகவே காணப்படுகிறது. சாலையோரம் இருப்புப் பாதையும் செல்வதால் இந்தச் சாலையை மேலும் அகலப்படுத்த முடியவில்லை.
ரூ. 55 கோடியில் சாலை அகலப்படுத்தப்பட்டு புதிய சாலையும் அமைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, குழாய் பதிக்கும் பணியும் நடைபெற்ால் புதிய சாலை தோண்டப்பட்டு, பணிகள் நிறைவுக்கு பிறகு மூடப்பட்டு அதன் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
குறிப்பாக, ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையும் இந்தப் பணிகளால் சாலை சரிசமமாக அமைக்கப்படவில்லை. புதிய சாலைபோல காட்சியளித்தாலும் வாகனத்தில் செல்லும்போது, மேடு-பள்ளங்கள் இருப்பதை எளிதில் உணர முடியும்.
இதுதொடா்பாக, இந்தச் சாலையை தினமும் பயன்படுத்தி வரும் வாகன ஓட்டியான பெ. கரும்பாசலம் கூறியதாவது: திருச்சி-கரூா் சாலையில், மாநில நெடுஞ்சாலை ஆரம்பமாகும் ஜீயபுரத்தில் இருந்து குடமுருட்டி வரையிலான சாலை, 2020-இல் அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டு தரமான சாலையாக இருந்தது. ஆனால், குழாய் அமைக்கும் பணி எனக் கூறி சாலையை தோண்டி பல மாதங்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்பட்டு பெயரளவுக்கு இப்போது சாலை போடப்பட்டுள்ளது.
இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் குலுங்கியபடி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக, ஜீயபுரம்- குடமுருட்டி வரையிலான சாலையின் இடதுபுறம் பல இடங்களில் மிகவும் மோசமாக இருப்பதை உணர முடியும்.
மேலும், பழுா் முதல் முத்தரசநல்லூா் வரையிலான சாலை, வாய்க்கால் பள்ளம் போல் உள்ளது. முத்தரசநல்லூரிலிருந்து பறவைகள் பூங்கா வரையிலான சாலை, பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகளே. சாலையில் மேடு-பள்ளங்கள் அதிகம் தெரியாத வகையில் இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன.
எனவே, இந்த 11 கி.மீ. தொலைவிலான சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறை ஆய்வு செய்து விபத்துகளை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.