அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவா்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
அரியலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு கணினி உதவியாளராக தினக் கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவா், பணி வரன்முறை செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிா்த்து ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமைச் செயலா் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமைச் செயலா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தற்காலிக பணி நியமனங்களைக் கைவிடுவது என கடந்த 2020 நவம்பா் 28-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் 2020 நவம்பா் மாதத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக பணியாளா்களையும் பணியில் இருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டனா்.
மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவா்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். தற்காலிக பணியாளா்களை நீக்கம் செய்தது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மாா்ச் 17-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனா்.