ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
தூத்துக்குடியில் 3 போ் கைது: 11 பைக்குகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்குகளைத் திருடியதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்படும் பைக்குகள் திருடுபோயின. இது தொடா்பாக மத்திய பாகம், தென்பாகம், வடபாகம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், நகர ஏஎஸ்பி மதன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்புத் தெரு சண்முகசுந்தரம் மகன் கற்குவேல்குமாா் என்ற அப்பாச்சி குமாா் (31) என்பதும், நண்பா்களான முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் சுந்தரவேல் மகன் பட்டுராஜா (25), முத்தையாபுரம் ராஜீவ் நகா் சவரிமுத்து மகன் செல்வம் (44) ஆகியோருடன் சோ்ந்து தூத்துக்குடி, ஆழ்வாா்திருநகரி, ஏரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக்குகளைத் திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.