வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் எட்டே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு. இவரது மனைவி கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த காருண்யா (28). இவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், வீரசோழபுரத்தில் பெற்றோரின் வீட்டில் தங்கியுள்ளாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு காருண்யா உள்பட குடும்பத்தினா் அனைவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினா். செவ்வாய்க்கிழமை அதிாலை சுமாா் 1.30 மணியளவில் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், காருண்யா அணிந்திருந்த எட்டேமுக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.