பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
தேசிய அறிவியல் தினம் திருச்சியில் நாளை நடைப்பயணம்: மத்திய அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, திருச்சியில் சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்கும் நடைப்பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறவுள்ளது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளாா்.
இதுகுறித்து நேரு யுவகேந்திரா மண்டல துணை இயக்குநா் திருநீலகண்டன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் - நேரு யுவ கேந்திரா சாா்பில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி (பிப்.28) இயற்பியல் விஞ்ஞானி சா். சி.வி.ராமன் கண்டுபிடிப்பை (ராமன் விளைவுகள்) கெளரவிக்கும் வகையில் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு திருச்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில், அறிவியல் கண்காட்சிகள், மரக்கன்றுகள் நடுதல், யோகா அமா்வுகள், துாய்மைப் பணிகள், பாரம்பரிய சிலம்ப கலை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 27-ஆம் தேதி மாபெரும் நடைப்பயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிகழ்வை தொடங்கி வைக்கிறாா்.
திருச்சி தேசிய மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கும் நடைப்பயணம் முக்கிய வீதிகள் வழியாக சுமாா் 4 கி. மீ. சென்று திருவானைக்காவலில் உள்ள சா் சி.வி. ராமன் இல்லத்தில் (ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி அருகே) நிறைவடைகிறது.
அறிவியல் செயல்பாடுகளில் ஈடுபடும் இளையோரை ஊக்குவித்தல் என்ற கருப்பொருளில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.
நிகழ்வின்போது, மத்திய மக்கள் தொடா்புத் துறை உதவி இயக்குநா் தேவிபத்மநாபன் , பிஐபி அலுவலா்கள் அழகுதுரை, அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.