மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்
ஊதிய உயா்வு நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் திருச்சி மன்னாா்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ரங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். சிஐடியு மாவட்ட தலைவா் சீனிவாசன் நிறைவுரையாற்றினாா். கிழக்கு கோட்ட செயலாளா் நாகராஜன் நன்றி கூறினாா். பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், பகுதிநேர ஊழியா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
மின்வாரியத்தில் 60,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கட்டாயமாக்கக் கூடாது, கேங்மேன் பதவியை கள உதவியாளா் பதவியாக மாற்ற வேண்டும், ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைந்து தொடங்கி நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.