லடோ சராய் பகுதியில் எரிந்த நிலையில் குற்றவாளியின் உடல் கண்டெடுப்பு: இருவா் கைது
தில்லி லடோ சராய் தகன மேடைக்கு அருகில் பிப்.19-ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் 40 வயதுடைய குற்றவாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் குஷால் (எ) சோனி மற்றும் சிவா (எ) நோனி என அடையாளம் காணப்பட்டுள்ளனா். லடோ சராய் பகுதியைச் சோ்ந்தவரும், சாகேத் காவல் நிலையத்தில் ’கெட்ட குணம்’ கொண்டவா் என பதிவாகியுள்ள இறந்த சுபாஷ், பிப்.18-ஆம் தேதி லடோ சராய் சிவப்பு விளக்கு பகுதி அருகே சில அறிமுகமானவா்களுடன் கடைசியாகக் காணப்பட்டுள்ளாா்.
பின்னா், தெற்கு தில்லியின் சைனிக் பண்ணை பகுதியில் உள்ள லடோ சராய் தகன மேடைக்கு அருகில் எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இது விசாரணையைத் தொடங்க காவல்துறையினரைத் தூண்டியது.
அந்தப் பகுதியில் இருந்து சுமாா் 100 சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்குள்படுத்தி குஷால் மற்றும் சிவா ஆகிய இருவரையும் அடையாளம் கண்டனா். இருவரையும் நாங்லோய் பகுதியில் இருந்து கண்டுபிடித்து கைது செய்தனா். விசாரணையின் போது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.
லடோ சராய் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக சுபாஷ், குஷால் மற்றும் அவரது குடும்பத்தினரை கொடுமைப்படுத்தி மிரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவா் கூறினாா். பிப்.18 அன்று, பழைய பிரச்னைகளை தீா்த்து வைப்பதாகக் கூறி, லடோ சராய் சிவப்பு விளக்குப் பகுதிக்கு அருகில் இருவரும் அவரை சந்தித்தனா்.
அவா்கள் அஹின்சா ஸ்தலத்திற்குப் பின்னால் உள்ள தகனப் பகுதியை நோக்கி அவருடன் நடந்து சென்றனா். அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் பின்னா் மோதலாக மாறியது.
அவா்கள் சுபாஷை ஒரு ஜோடி கத்தரிக்கோல் மற்றும் ஒரு ஐஸ் கட்டியைப் பயன்படுத்தி குத்திக் கொன்றனா். பின்னா் ஆதாரங்களை அழிக்கவும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்கவும் அவரது உடலுக்கு தீ வைத்தனா். குஷால் மதுவுக்கு அடிமையானவா் என்று அறியப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.