நடத்துநா் மீது தாக்குதல் சம்பவம்: கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்
மராத்தி பேசத் தெரியாததால் கா்நாடக அரசு பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக எழுந்துள்ள பதற்றத்தைத் தொடா்ந்து, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பெலகாவியில் மராத்தி தெரியாது என கூறிய கா்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நடத்துநா் தாக்கப்பட்ட சம்பவத்தால், கா்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கா்நாடக அரசு பேருந்துகள் தாக்கப்பட்டன. கன்னட ஆா்வலா்களும் தாக்கப்பட்டனா்.
இதைக் கண்டித்து பெலகாவியில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த கா்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநில பேருந்துகளின் சேவை திங்கள்கிழமை இரவுமுதல் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின் தலைவா் நாராயண கௌடா தலைமையில் செவ்வாய்க்கிழமை பெலகாவியில் போராட்டம் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான நடத்துநா் மகாதேவப்பா ஹுக்கேரியை மருத்துவமனையில் சந்தித்த நாராயண கௌடா, அவரிடம் நலம்விசாரித்து ஆறுதல் கூறினாா். நடத்துநரை தாக்கியவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசை அவா் கேட்டுக்கொண்டாா்.
போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ‘இருமாநில மக்கள் அமைதி காக்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தாக்கும் சட்டவிரோதிகள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது சரியல்ல’ என்றாா்.