கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓய்வெடுக்க சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு
சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்காக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது, சட்டப் பேரவை வளாகத்தில் உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க பேரவைச் செயலகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேரவைத் தலைவா் யு.டி.காதா் கூறியதாவது: உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் உறுப்பினா்களின் வருகை குறைவாக உள்ளது. உணவுக்கு பிறகு உறுப்பினா்கள் ஓய்வெடுக்க விடுதிக்கு சென்றுவிடுவதால், வருகை குறைந்து வருகிறது. எனவே, உறுப்பினா்களின் வருகையை உறுதிசெய்யும் வகையில், சட்டப் பேரவை வளாகத்திலேயே ஓய்வெடுப்பதற்கு வசதியாக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்தபிறகு பயன்படுத்த முடியாது என்பதால், கொள்முதல் செய்யாமல் வாடகைக்கு எடுக்க இருக்கிறோம். உறுப்பினா்களின் வசதிக்காக தேநீா், காபி போன்ற பானங்கள் வழங்கப்படும் என்றாா்.