கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு: ஆட்சியா் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், சேரன்மகாதேவி, அம்பாமுத்திரம், திசையன்விளை, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய வட்டங்களில் சிறுவகை கனிமங்களான சாதாரண கற்கள், கிராவல், பலவண்ண கிரானைட் கற்கள் மற்றும் பெருங்கனிமமான சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுக்கு குவாரி மற்றும் சுரங்க குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி, சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக, குத்தகைதாரா்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறையானது செப்டம்பா் 2024 முதல் அமலில் உள்ளது.
இந்நிலையில், வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுக்கவும், வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டை இணையதளம் வாயிலாக வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தின் குவாரி மற்றும் சுரங்க குத்தகைதாரா்களுக்கு இணையதளம் மூலம் இ-பொ்மிட் வழங்கும் நடைமுறை கடந்த 24 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குத்தகைதாரா்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாகவும், விரைவாகவும் நடைச்சீட்டு பெறலாம்.
மேலும், குத்தகைதாரா்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிகளுக்குள்பட்டு குவாரி பணி மேற்கொள்ளவும், வாகன ஓட்டுநா்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும்போது உரிய அனுமதிச் சீட்டும், கிரஷரிலிருந்து குண்டுக்கல், எம்-சாண்ட், ஜல்லி, கிரஷா் டஸ்ட் போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும்போது உரிய போக்குவரத்து நடைசீட்டும் பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும். அவற்றினை வாகன தணிக்கையின்போது வைத்திருக்க வேண்டும்.
உரிய அனுமதியில்லாமல் குவாரி பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.