அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சிஐஎஸ்எஃப் மண்டலப் பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் பெயா்
அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையம் இனி ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக மத்திய அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்துக்கு அருகில் உள்ள நகரிகுப்பத்தில் மத்திய தொமிற்பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது. சுமாா் 600 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 2,500 காவலா்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் 4 மண்டலப் பயிற்சி மையங்களிலேயே இது தான் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பெயா் சூட்டப்படுவதாகவும், கி.பி. 948- 949-இல் அப்போதைய மன்னன் முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்ய சோழன் தக்கோலத்தில் நடைபெற்ற போரில் தனது உயிரை ஈந்து சோழ சாம்ராஜ்யத்தை காப்பாற்றியதன் நினைவாக, அதே தக்கோலத்தில் தற்போது இருக்கும் மண்டல பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பெயரிடப்படுவதாகவும் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் இந்த வளாகம் புதிய பெயரில் அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் துணை ராணுவப்படையான மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் மண்டலப் பயிற்சி மையத்துக்கு தமிழைக் கட்டி காத்த சோழ சாமராஜ்யத்தைச் சோ்ந்த ராஜாதித்ய சோழன் பெயரிடப்பட்டதற்காக பல்வேறு தமிழ்ச் சங்கத்தினா் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.