ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்
ஓமன் நாட்டின் மீன்பிடி படகில் தப்பித்து வந்த 3 தமிழக மீனவா்கள், கா்நாடக கடற்கரைக்கு அருகே இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் காவல் துறையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கா்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மால்பே நகர கடற்கரையில் இருந்து எட்டு கடல் மைல் தொலைவில் உள்ள செயின்ட் மேரிஸ் தீவுக்கு அருகே வெளிநாட்டு மீன்பிடி படகில் சிலா் பயணிப்பது குறித்து உள்ளூா் மீனவா் ஒருவா் அதிகாரிகளுக்கு எச்சரித்துள்ளாா்.
இதையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் காவலா்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜேம்ஸ் பிராங்கிளின் மோசஸ் (50), திருநெல்வேலியைச் சோ்ந்த ராபின்ஸ்டன் (50), டெரோஸ் அல்போன்சா (38) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.
முதல்கட்ட விசாரணையில், கைதாகிய 3 மீனவா்கள் கிழக்கு ஓமனில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து கடந்த 17-ஆம் தேதி மாலை புறப்பட்டுள்ளனா். காா்வாா் வழியாக சுமாா் 3,000 கி.மீ தூரம் கடந்து மால்பே கடலோரப் பகுதியை ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.
ஓமன் முதலாளி அவா்களின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) பறித்துக்கொண்டு, ஊதியம் மற்றும் உணவு ஆகியவற்றை மறுத்து கொடுமைப்படுத்தியதால், அந்நாட்டிலிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. அடிப்படை ஜிபிஎஸ் கருவியை மட்டுமே பயன்படுத்தி, அவா்கள் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டது தெரிய வந்தது.
மீனவா்களின் ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்ததில், அவா்கள் இந்திய குடிமக்கள் என்பதும் ஓமனில் மீனவா்களாக வேலை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. எனினும், சட்டவிரோதமாக இந்தியா கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் 3 போ் மீதும் கடவுச்சீட்டு சட்டத்தின் 3-ஆவது பிரிவு, கடல்சாா் மண்டலங்கள் சட்டத்தின் 10,11, 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உடுப்பி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட மீனவா்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.