சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
இது தொடர்பாக பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் அவர் பேசியதாவது:
பிகாரில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது; எனினும் இந்த விவகாரத்தில் இன்னும் நிறைய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பிகாரில் மேலும் பல சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக நாட்டில் உள்ள மற்ற மருத்துவமனைகளுடன் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிறப்பான சிகிச்சைகளை அளிப்பதற்காக சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்கள் பிரத்யேக மருத்துவ மையங்களை உருவாக்கியுள்ளன. அதுபோன்ற மையங்களை பிகாரும் உருவாக்க வேண்டும்.
இதன்மூலம் பிகார் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதுடன் இந்த மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும். இந்தப் பெருமுயற்சிக்கு பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் அதன் முன்னாள் மாணவர்களும் பெரிய அளவில் பங்களிக்க முடியும்.
ஆசியாவின் சிறந்த மருத்துவமனைகளில் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் ஒன்றாகும்.
இந்தக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் தங்கள் சேவையின் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இதற்கு புகழைத் தேடித் தந்துள்ளனர். சிகிச்சைக்காக வேறொரு நகரத்துக்கோ வேறொரு மாநிலத்துக்கோ செல்வதில் சிகிச்சையில் தாமதம், உணவுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாடு முழுவதும் மருத்துவக் கல்வி நிலையங்களை பரவலாக அமைப்பது அவசியம்.
இந்த சகாப்தத்தில் மருத்துவத் துறையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும் மருத்துவ நடைமுறைகளை எளிதாக்குகின்றன.
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடர்புடைய அனைவரும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும்.
மருத்துவர்கள் ஆய்வாளர்களாகவும் நோயைக் குணப்படுத்துபவர்களாகவும் ஆசிரியர்களாகவும் செயல்பட்டு மக்களுக்கும் சமூகத்துக்கும் சேவை புரிகின்றனர் என்றார் அவர்.