இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி
குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் செழுமையில் அதன் கிழக்குப் பகுதிகள் ஆற்றிய பங்களிப்புக்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இன்று வளர்ந்த பாரதம் என்ற லட்சியக் கனவை நோக்கி நாம் பயணிக்கும் சூழலில் நாட்டின் கிழக்குப் பகுதிகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும்.
உலக அளவில் ஸ்திரமற்ற சூழல் நிலவியபோதிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை பொருளாதார நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக் கொள்கின்றனர்.
அடுத்த 25 ஆண்டுகளைக் கருத்தில்கொண்டு இன்றைய இந்தியா பாடுபட்டு வருகிறது. இந்தியாவின் திறன்வாய்ந்த இளைஞர்கள் மீது உலகம் அதீத நம்பிக்கை வைத்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுடனும் இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. கிழக்காசியாவுடன் இந்தியா கொண்டுள்ள தொடர்பும் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தியா -மத்திய கிழக்கு -ஐரோப்பிய பொருளாதார பெருவழித்தடமும் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.
இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாமின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது ரூ. 6 லட்சம் கோடி பொருளாதாரத்தைக் கொண்டதாக இந்த மாநிலம் உள்ளது.
கடந்த 2014-இல் பிரம்மபுத்ரா நதியின் மீது கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 பாலங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் நான்கு புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுக்கு பாரத ரத்னா பூபேன் ஹசாரிகாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2014 வரை அஸ்ஸாமுக்கு ரயில்வே பட்ஜெட்டில் சராசரியாக ரூ. 2,100 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடாக கிடைத்து வந்தது. எனினும் தற்போதைய மத்திய அரசு அஸ்ஸாமுக்கான ரயில்வே பட்ஜெட்டை நான்கு மடங்காக -அதாவது ரூ.10,000 கோடியாக உயர்த்தியுள்ளது.
அஸ்ஸாமில் உள்ள 60 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வடகிழக்கில் முதல் நடுத்தர அதிவேக ரயில் குவாஹாட்டிக்கும் நியூ ஜல்பைகுரிக்கும் இடையே இயக்கப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டுவரை அஸ்ஸாமில் ஏழு வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், தற்போது 30 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன என்றார் அவர்.
பிரதமருக்கு நினைவுப் பரிசு: இந்த நிகழ்ச்சியில் செமிகண்டக்டர் சில்லுகளால் செய்யப்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருக பொம்மையை பிரதமருக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா நினைவுப் பரிசாக வழங்கினார். இதுதவிர, அஸ்ஸாமில் உள்ள சக்தி வழிபாட்டுத் தலமான காமாக்யா கோயிலின் மாதிரி வடிவத்தையும் அவர் நினைவுப் பரிசாக வழங்கினார்.