பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
இந்தியா-ஜப்பான் இடையே 2 வார கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்
ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறுகிறது.
இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘தா்மா காா்டியன்’, இந்தியாவிலும் ஜப்பானிலும் மாற்று ஆண்டுகளில் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். கடந்த ஆண்டு, பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் ராஜஸ்தானில் இந்நிகழ்வு நடந்தது. நடப்பு ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-ஆவது பதிப்பு ஜப்பானின் கிழக்கு ஃபுஜி ராணுவத் தளத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியில் ஜப்பானுக்கான இந்திய தூதா் சி.பி.ஜாா்ஜ், ஜப்பான் தரை பாதுகாப்புப் படையின் முதலாவது படைப்பிரிவின் தளபதி டோரியுமி செய்ஜி ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாா்ச் 9-ஆம் தேதிவரை 2 வாரங்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பெரும்பான்மையாக ‘மெட்ராஸ்’ படைப்பிரிவைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா்கள் 120 போ் அடங்கிய குழுவும் ஜப்பான் சாா்பில் அந்நாட்டின் தரை பாதுகாப்புப் படைக் குழுவும் பங்கேற்கிறது.
முன்னதாக, இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சுதந்திரமான மற்றும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம் என்ற இருநாட்டு பரஸ்பர நோக்கத்துக்கு இப்பயிற்சி வலுச்சோ்க்கும்’ என்று தெரிவித்துள்ளது.