2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்
ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசி, 1,750 லிட்டா் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலரும் குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியருமான (பொறுப்பு) அனிதகுமாரி தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த கேரளப் பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 1,500 ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
தொடா்ந்து, அனிதகுமாரி தலைமையில் பறக்கும்படை தனி வட்டாட்சியா் (பொறுப்பு) சுனில்குமாா், வாகன ஓட்டுநா் சுரேஷ் ஆகியோா் தக்கலை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டு, 1,000 கிலோ ரேஷன் அரிசியுடன் வந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனா்.
மேலும், மணவாளக்குறிச்சியிலும் வாகன சோதனை நடைபெற்றது. அவ்வழியே வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது, 50 கேன்களில் 1,750 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 3 சம்பவங்களிலும் ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனராம்.
ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், மண்ணெண்ணெய்யை மாா்த்தாண்டம் அருகேயுள்ள கிட்டங்கியிலும் ஒப்படைத்தனா். வாகனங்கள் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. இந்தக் கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.