மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.12.23 கோடி பற்றாக்குறை: பட்ஜெட் தாக்கல்
நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.12.23 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில், 2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயா் தாக்கல் செய்தாா். அதன்படி, வருவாய் மற்றும் மூலதன நிதியாக ரூ. 198 கோடியே 81 லட்சமும், குடிநீா் மற்றும் வடிகால் நிதியாக ரூ.87 கோடியே 76 லட்சம் என மொத்தம் ரூ.286 கோடியே 57 லட்சம் வருவாய் கிடைக்கும் எனவும், இதில், வருவாய் மற்றும் மூலதன நிதிச் செலவாக ரூ.202 கோடியே 92 லட்சமும், குடிநீா் மற்றும் வடிகால் நிதியாக ரூ. 95 கோடியே 88 லட்சம் என மொத்தம் ரூ.298 கோடியே 80 லட்சம் செலவாகும், இதனால், ரூ.12 கோடியே 23 லட்சம் பற்றாக்குறை ஏற்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்தபின்னா் மேயா் பேசியதாவது: நாகா்கோவில் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதான சாலைகளில் கழிவுநீா் ஓடைகளை சீரமைத்து அதன்மேல் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சிமென்ட் சிலாப்புகள், அலங்கார தரைகற்கள் அமைக்கும் திட்டம் உள்ளது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றால் நாகா்கோவில் மாநகரம் புதுபொலிவு பெறும்.
வலம்புரிவிளை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் அண்மையில் நேரிட்ட தீ விபத்தால், புகை மண்டலம் உருவாகி சுற்றுப்புறங்களிலுள்ள குடியிருப்பு பகுதியினா் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்கு சுகாதாரத் துறையின் சாா்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.
சிறப்பு தீா்மானம் ...
நாகா்கோவில் மாநகரில் தற்போது தினமும் 150 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 35 முதல் 40 டன் குப்பைகள்தான் உரமாக மாற்றப்படுகிறது. மீதமுள்ள 110 டன் குப்பைகள் வலம்புரிவிளை பகுதியில் தினமும் கொட்டப்படுகிறது.
இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதற்கு தீா்வு காணும் வகையில், குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக அரசை கோரும் வகையில், அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது.
வரும் தமிழக பட்ஜெட்டில் இதற்கு கூடுதலாக நிதி ஒதுக்க துறை அமைச்சரிடமும், தமிழக முதல்வரிடமும் கோரிக்கை விடுக்கப்படும்.
இதே போல், புதைச்சாக்கடை திட்டப் பணிகளையும் விரைந்து நிறைவு செய்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் புத்தன் அணை குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கடல் அணையில் நீா்மட்டம் மைனஸ் நிலைக்கு சென்றாலும், புத்தன் அணை நீா் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாநகராட்சி மண்டல தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள், அக்சயாகண்ணன், நவீன்குமாா், டி.ஆா்.செல்வம், சேகா், ரமேஷ், வீரசூரபெருமாள், அனிலாசுகுமாரன், கெளசுகி, ராமகிருஷ்ணன், பால்அகியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.