கல்பவிருட்ச வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி வடிவில் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக சோமஸ்கந்தமூா்த்தி கல்பவிருட்ச வாகனத்தில் நகா்வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கோயிலில் வாகன சேவை தொடங்கி கபிலதீா்த்தம் சாலை, அன்னாராவ் வட்டம், விநாயகா நகா் எல்-டைப் குடியிருப்பு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில், என்ஜிஓ காலனி, அலிபிரி பைபாஸ் சாலை வழியாக கோயிலுக்குத் திரும்பியது.
பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனா். பஜனைகளும், மங்கள வாத்திய கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னா், ஸ்ரீ சோமஸ்கந்தமூா்த்தி, காமாட்சி அம்மனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. வாகன சேவையில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.