மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்
V.T. Rajshekar: `தலித் மக்களுக்காக ஒலித்த குரல்'- மூத்த பத்திரிகையாளர் வி.டி. ராஜசேகர் உயிரிழப்பு
பிரபல மூத்த பத்திரிகையாளரும், தலித் வாய்ஸ் (Dalit Voice) இதழின் நிறுவனரும், ஆசிரியருமான வி.டி. ராஜசேகர் (93) இன்று உயிரிழந்தார்.
1932 ஜூலை 17-ல் கர்நாடகாவில் பிறந்த ராஜசேகர், பின்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உரக்க ஒலிக்கும் முகமாக உருவெடுத்தார். இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு பத்திரிகையாளராகத் தனது சமூகப் பணியைத் தொடங்கிய ராஜசேகர், சுமார் 25 ஆண்டுகள் அங்கு பணியாற்றி, தலித் மக்கள் மீது அரங்கேறும் கொடுமைகளை வெளிக்கொண்டுவரும் வகையிலும், அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், 1981-ல் `தலித் வாய்ஸ்' என்ற பத்திரிகையை நிறுவினார்.
தலித் மக்களின் குரலாக ஒலித்த இந்தப் பத்திரிகை சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க பத்திரிகையாக உருவெடுத்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை, `இந்தியாவில் மிகப் பரவலாக பிரசுரம் செய்யப்படும் தலித் பத்திரிகை' என்று பாராட்டியிருக்கிறது. இருப்பினும், 2011-ல் இந்தப் பத்திரிகை மூடப்பட்டது. மறுபக்கம், தனது வெளிப்படையான கருத்துக்களுக்காக பல்வேறு சவால்களையும் இவர் எதிர்கொண்டார்.
1986-ல், இந்துக்களுக்கு எதிராக எழுதியாக இவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. மேலும், அதே ஆண்டில் தடா சட்டத்தின் கீழ் பெங்களூரூவில் கைதும் செய்யப்பட்டார். இவர் பல்வேறு நூல்களையும் எழுதியிருக்கிறார். அதில், `கர்நாடகாவில் தலித் இயக்கம்', `இந்து இந்தியாவில் மார்க்ஸ் தோற்றது எப்படி', `கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்', `சாதி - தேசத்துக்குள் ஒரு தேசம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார்.
அதோடு, கர்நாடக பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர், இந்திய சீன நட்புறவுக் கழக அமைப்பாளர், பெங்களூரூ துளு கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். இந்த நிலையில், ராஜசேகர் தனது 93-வது வயதில், மங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இறப்புக்குப் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இறுதிச் சடங்குகள் இவரின் சொந்த ஊரான ஒந்திபெட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.