Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.

இரண்டுக்கட்ட நிகழ்வுகள் முடிந்த நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக மாணவர்களை அழைத்துப் பரிசளித்து வருகிறார். தன்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம் என, இந்த நிகழ்ச்சியின் போது விஜய் பேசியிருக்கிறார்.
விஜய் பேசியதாவது, "நீங்கெல்லாம் ரொம்ப தூரத்துல இருந்து வந்துருக்கீங்க. எல்லாரையும் குடும்பத்தோட தனித்தனியா சந்திக்கப்போறேன். அதனால் யாரும் அதிகமாகப் பேச வேண்டாம்.
தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதேமாதிரி காமராஜர், இளைய காமராஜர் என்றும் சொல்ல வேண்டாம். 2026 தேர்தலைப் பற்றியும் பேச வேண்டாம். உங்களுடைய பள்ளியைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் பேசுங்கள்" என்றார்.

கடந்த நிகழ்ச்சியின்போது மாணவர் ஒருவரின் தந்தை விஜய்யை 'இளைய காமராஜர்' எனப் பாராட்டியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பலரும் 2026 தேர்தலில் விஜய் வென்று முதல்வராக வேண்டும் என்றும் பேசியிருந்தனர்.