திருவண்ணாமலை: மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு!
Vikrant Massey: ` அப்போ டி.வி; இப்போ சினிமா' - 12th Fail நடிகர் சினிமாவிலிருந்து விலகுவது ஏன்?
பெரும்பான்மையான நடிகர்கள் கரியரின் உச்சத்தில் இருக்கும்போது அதிலிருந்து ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
பெரியளவிலான வாய்ப்புகள் இல்லாத சூழலிலும் உடல்நிலை ஒத்துழைக்காத சூழலிலும்தான் இத்தகைய ரிடையர்மென்ட் முடிவை நோக்கி நகர்வார்கள். ஆனால் இன்று ஓய்வை அறிவித்திருக்கும் பாலிவுட் நடிகருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு பெரிய பிரேக் கிடைத்தது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அந்த பாலிவுட் நடிகர்தான் விக்ரந்த் மாஸ்ஸி. `12th ஃபையில்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் பேசப்பட்டார்.
இத்திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்படியான ஒரு மிகப்பெரிய ஹிட் கிடைத்தவுடன் பல நட்சத்திரங்களும் கரியரை பலப்படுத்திக் கொள்ளதான் திட்டமிடுவார்கள். ஆனால் விக்ரந்த் மாஸ்ஸி இந்தத் தருணத்தில் ஓய்வை அறிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். விக்ரந்த் மாஸ்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான `தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற பாலிவுட் திரைப்படம் அமித் ஷா உட்பட பல அரசியல் தலைவர்களிடம் பாராட்டைப் பெற்றாலும் விமர்சகர்களிடம் இது ஒரு பிரச்சார திரைப்படம் என்ற பெயரையே பெற்று வருகிறது.
ஓய்வு குறித்து விக்ரந்த் மாஸ்ஸி, `` என்னுடைய வாழ்வில் கடந்த சில வருடங்கள் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. அப்படியான விஷயத்துக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரம் ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, ஒரு நடிகனாக என் வாழ்வை மறு பரிசீலனை செய்வதற்கான நேரமாக இதைக் கருதுகிறேன். எனவே, 2025-ம் வருடம் ஒருமுறை இறுதியாக உங்களை சந்திக்கிறேன்." எனக் குறிப்பிட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இவரின் ஓய்வு குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களெங்கும் தற்போது நிறைந்திருக்கிறது. `12th ஃபையில்' திரைப்படத்திற்காக அதிகளவில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றவர் `தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தின் மூலம் பல எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
இதுபோன்ற விமர்சனங்களால் காயப்பட்டுதான் சினிமாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் எனவும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இத்திரைப்படத்தினால் அவர் சந்திக்கும் விஷயங்கள் குறித்து படத்தின் புரோமோஷன் நேரத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில் அவர், `` எனக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன. இன்னும் அதிகமாக அச்சுறுத்தல்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளன. நடிகர்களாக ஒரு திரைப்படத்தின் கதையை நாங்கள் சொல்கிறோம்.
`தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த விமர்சனங்களை எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாள்வோம். என்னுடைய குழந்தை இன்னும் நடக்ககூட தொடங்கவில்லை. இந்த விமர்சனத்தில் அவனுடைய பெயரையும் இழுக்கிறார்கள். நாம் எப்படியான சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம்." எனக் கூறியிருந்தார்.
விக்ரந்த் மாஸ்ஸியின் ஓய்வு குறித்த முடிவை இதுபோன்ற விமர்சனங்கள்தான் எடுக்க வைத்திருக்கிறது எனப் பேசப்பட்டு வரும் நிலையில் இதே போன்றதொரு முடிவை முன்பே எடுத்திருக்கிறார். 2013-ம் ஆண்டுக்கு முன்பு வரை டி.வி பக்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வந்த விக்ரந்த் மாஸ்ஸி திடீரென அங்கிருந்து நகர்ந்து சினிமாவுக்கு வந்தார். டி.வி துறையிலிருந்து விலகியது குறித்து அவர், `` நான் டி.வி பக்கம் இருக்கும்போது அதிகளவில் வருமானம் ஈட்டினேன். மாதம் கிட்டதட்ட 35 லட்ச ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய குடும்பத்தின் தேவைகளையெல்லாம் அப்போது என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது.
என்னுடைய கடன் அனைத்தையும் அந்த சமயத்தில் நான் முடித்துவிட்டேன். இருப்பினும் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. நல்ல வேலையை தொடர்வது என்பது முக்கியம் என்பதை எண்ணி அப்போது டி.வி-யிலிருந்து முழுமையாக விலகி ஆடிஷன்களில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது என்னுடைய மனைவிதான் குடும்பத்தை பார்த்துக் கொண்டார்." எனக் கூறியிருக்கிறார்.
நிம்மதிக்காக அப்போது டி.வி-யிலிருந்து விலகியவர் இப்போது அதே போன்றதொரு முடிவை சினிமாவில் எடுத்திருக்கிறார் என அவரின் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...