AUS-W vs IND-W: சொதப்பிய இந்திய மகளிர் அணி... ஆஸியிடம் ஒயிட் வாஷ் ஆன இந்தியா!
Virat Kohli : '5 ஆண்டுகளில் மூன்றே சதங்கள்; கோலியின் டெஸ்ட் கரியர் முடிவுக்கு வருகிறதா?'
பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டிக்காக பிரிஸ்பேனில் சுறுசுறுப்பாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் விராட் கோலி. வழக்கத்தை விட அவரது பயிற்சியில் ஒருவித தீவிரம் தெரிவதாக அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் ரிப்போர்ட் செய்கிறார்கள். கோலிக்கு இந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் ஒவ்வொரு போட்டியுமே வாழ்வா சாவா போட்டி. காரணம், சமீபகாலமாக தொய்வடைந்திருக்கும் அவரது ஆவரேஜ். 50 க்கு மேல் ஆவரேஜ் வைத்துக் கொண்டு Fab 4 லிஸ்ட்டில் கம்பீரமாக நின்ற கோலி, கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக சொதப்பியிருக்கிறார். கோலியின் டெஸ்ட் கரியரையே கேள்விக்குள்ளாக்கியிருக்கும் அவரது ஆவரேஜ் பற்றிய அலசல் இங்கே.
2011 ஓடிஐ உலகக்கோப்பையை இந்தியா வென்ற கையோடுதான் கோலியின் டெஸ்ட் அறிமுகமும் நிகழ்ந்திருந்தது. 2011 ஜூனில் ஜமைக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில்தான் கோலி டெஸ்ட் தொப்பியை வாங்கினார். கோலியை நம்பர் 5 இல் இறக்கியிருப்பார்கள். அந்த அறிமுக டெஸ்ட் அவருக்கு ஒன்றும் நினைவில் வைத்து போற்றிக்கொள்ளும் வகையில் அமையவில்லை. சொல்லப்போனால், அந்த 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதி முழுவதுமே அவருக்கு அத்தனை சிறப்பாக ஒன்றுமே அமையவில்லை. அந்த அறிமுக ஆண்டில் அவரின் ஆவரேஜ் 22.4 ஆக மட்டுமே இருந்தது. டெஸ்ட்டில் தனது முதல் சதத்தையே 2012 இல் தான் கோலி அடித்தார். அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் கோலி தனது முதல் சதத்தை அடித்திருந்தார். 2014 இல் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போது அடிலெய்டு டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்திருப்பார்.
அதனால்தான் கோலியே அடிலெய்டை தனக்கு விருப்பமான மைதானமாக இன்றைக்கும் சொல்லி வருகிறார். கோலி தனது முதல் சதத்தை அடித்த 2012 முதல் 2015 வரைக்குமான நான்கு ஆண்டுகளும் அவருக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 698 ரன்களை இந்த காலக்கட்டத்தில் எடுத்திருந்தார். 2012 முதல் 2015 வரை முறையே 49.2, 56, 44.6, 42.7 என்ற அளவிலேயே கோலியின் ஆவரேஜ் இருந்தது. 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடர்ச்சியாக சிங்கிள் டிஜிட்களில் அவுட் ஆகி கோலி ஏமாற்றம் அளித்திருந்தார். இந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 10 இன்னிங்ஸ்களில் கோலி தொடர்ச்சியாக சொதப்பியிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் முதல் 'Lean Patch' இதுதான்.
ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை சரியாக ஆட தெரியாமல் விக்கெட்டை தாரை வார்த்திருந்தார். 2015 இல் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் ஆகிறார். இதன்பிறகான மூன்று ஆண்டுகளும் அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சமான காலக்கட்டங்கள். 2016 முதல் 2018 வரை முறையே 1215, 1059, 1307 என ரன்களை வாரிக் குவித்தார். ஆவரேஜூம் எகிறியது. 2016, 2017 முறையே 75.9 மற்றும் 75.6 என உச்சபட்ச ஆவரேஜை வைத்திருந்தார். இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 14 சதங்களையும் 8 அரைசதங்களையும் அடித்திருந்தார். மிக முக்கியமாக முதல் முதலாக எங்கே சொதப்பினாரோ அதே இங்கிலாந்துக்கு மீண்டும் சென்று பக்குவமாக ஆடி ஒரே தொடரில் 500+ ரன்களை அடித்திருந்தார். அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் திகழ்ந்தார். கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்மித் என Fab 4 இன் மற்ற ஸ்டார் பேட்டர்கள் எல்லாருக்குமே கடும் சவாலை அளித்தார்.
2019 மே கூட கோலியின் சிறந்த ஆண்டுதான். மிகக்குறைந்த எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடியிருந்தார். 11 இன்னிங்ஸ்களில் 600 க்கும் அதிகமான ரன்களை அடித்திருந்தார். ஆவரேஜூம் 60 க்கும் மேல் இருந்தது. டெஸ்ட் மட்டுமென இல்லை. அவரின் ஒட்டுமொத்த கரியரின் உச்சக்கட்டமாகவும் இந்த காலக்கட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இதன்பிறகுதான் பிரச்சனையே ஆரம்பித்தது.
2020 கொரோனா காலக்கட்டத்துக்குப் பிறகு கோலியின் ஃபார்ம் அடிவாங்க தொடங்கியது. அந்த 2020 இல் 6 இன்னிங்ஸ்களில் 283 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ஆவரேஜ் 19.3 மட்டுமே. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் சதத்தை நெருங்கி ரஹானேவின் தவறால் ரன் அவுட் ஆக்கப்பட்டிருப்பார். அங்கிருந்துதான் கோலிக்கான செஞ்சுரி ஏக்கம் தொடங்கியது.
ஜெராக்ஸ் மெஷினை போல வேக வேகமாக சதமடித்து தள்ளிய கோலி ஒரு நல்ல இன்னிங்ஸை கூட ஆட முடியாமல் திணறினார். இந்த காலக்கட்டத்தில்தான் அணிக்குள்ளும் கோலியின் பிடி தளர தொடங்கியது. ஒயிட் பால் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். கூடவே ஃபார்மும் சரிந்தது. 2021 இல் அவரது ஆவரேஜ் 28.2 மட்டுமே. 2022 லுமே அவரது ஆவரேஜ் 26.5 ஆக மட்டுமே இருந்தது. 2023 இல் சறுக்கலிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பின் சதமடித்திருந்தார். ஆவரேஜையும் 55 க்கு நெருக்கமாக வைத்திருந்தார். ஆனால், இந்த ஆவரேஜை அவரால் நடப்பு ஆண்டில் அவரால் மெயிண்டெயின் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டில் இப்போது வரைக்கும் 16 இன்னிங்ஸ்களில் ஆடி 373 ரன்களோடு 26.6 ஆவரேஜை மட்டுமே வைத்திருக்கிறார். பெர்த்தில் ஆடிய ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே செஞ்சுரி கணக்கில் இருக்கிறது.
2020-24 என கணக்கிட்டால் மொத்தமாக இந்த 5 ஆண்டுகளில் 64 இன்னிங்ஸ்களில் 1961 ரன்களை 31.3 ஆவரேஜில் மட்டுமே எடுத்திருக்கிறார். கோலியின் இப்போதைய ஒட்டுமொத்த கரியர் ஆவரேஜ் 47.6 ஆக இருக்கிறது. 5 ஆண்டுகளில் மூன்றே சதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். ஒட்டுமொத்த ஆவரேஜ் 50 க்கு கீழ் இறங்கி அடி வாங்கியதில் அவரின் கடந்த 5 ஆண்டு கால ரெக்கார்டுகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.
ஒட்டுமொத்த ரெக்கார்டுகளை விட கவலையளிப்பது இந்திய மைதானங்களில் அவர் கொடுத்திருக்கும் செயல்பாடுகள்தான். கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மைதானங்களில் அவரது ஆவரேஜ் 29.9 மட்டும்தான். அவரின் உச்சபட்சமான 2016-18 காலக்கட்டத்தில் இந்திய மைதானங்களில் மட்டும் அவரது ஆவரேஜ் 81 ஆக இருந்தது.
என்னதான் பெர்த்தில் சதமடித்திருந்தாலும் கோலியிடம் முன்பிருந்த கன்ஸிஸ்டன்ஸ் இல்லை என்பதுதான் உண்மை. பார்டர் கவாஸ்கர் தொடரோடு இந்தியாவுக்கு நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி முடிவடைகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும் கோலி அணியில் நீடிக்க வேண்டுமெனில் இந்தத் தொடரில் இன்னும் ஒன்றிரண்டு நல்ல இன்னிங்ஸ்களையாவது ஆடியே ஆக வேண்டும். மீண்டு வருவது அவருக்கு புதிதல்ல. பொறுத்திருந்து பார்ப்போம்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...